புதிய பிரதமர் நீண்ட நாட்களுக்கு தொடர்ந்து பதவியில் நீடிக்க முடியாது: பரபரப்பை ஏற்படுத்தும் ஆய்வு முடிவுகள்...
பிரித்தானியாவில் அடுத்த பிரதமரைத் தேர்வு செய்வதற்கான நேரம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.
பிரதமர் தேர்வு செய்யப்பட்டாலும், அவரால் தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு பதவியில் நீடிக்க முடியாது என ஒரு ஆய்வு கூறுகிறது.
வரும் திங்கட்கிழமை, 5.9.2022 அன்று பிரித்தானியாவின் புதிய பிரதமர் அறிவிக்கப்பட உள்ளார்.
பல்வேறு சர்ச்சைகளைத் தொடர்ந்து பிரித்தானிய பிரதமரான போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்த நிலையில், பிரித்தானிய வழக்கப்படி, அவரது இடத்தில் வேறொருவரை பிரதமராக்கும் பொறுப்பு கன்சர்வேட்டிவ் கட்சியினருடையதானது.
பலர் பிரதமர் போட்டியில் களமிறங்கிய நிலையில், லிஸ் ட்ரஸ்ஸும் ரிஷி சுனக்கும் அனைவரையும் தாண்டி கடைசி இரு வேட்பாளர்களாக போட்டியில் நிற்கிறார்கள்.
அவர்களில் ஒருவரை கன்சர்வேட்டிவ் கட்சியினர் பிரதமராகத் தேர்வு செய்ய இருக்கிறார்கள்.
ஆனால், அப்படி ஒருவர் பிரதமராக அறிவிக்கப்பட்டாலும், அவரால் தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு பிரதமராக நீடிக்க முடியாது என்கிறது ஆய்வு ஒன்று.
அதாவது, பிரித்தானிய வரலாற்றில் ஏற்கனவே இதுபோன்ற விடயங்கள் நிகழ்ந்துள்ளன. அதாவது முந்தைய பிரதமரிடமிருந்து பிரதமர் பதவியைப் பெற்றுக்கொண்டவர்கள் சீக்கிரத்திலேயே பொதுத்தேர்தல் நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர்களான தெரஸா மே மற்றும் போரிஸ் ஜான்சன் ஆகியோர் விடயத்திலேயே அப்படி நடந்துள்ளது.
பிரித்தானியாவைப் பொருத்தவரை, பொதுவாகவே ஒருவர் பிரதமராகும் வரை மக்கள் காட்டும் ஆர்வம், அதற்குப் பிறகு விரைவில் குறைந்துவிடுகிறது. சமீபத்தைய ஆய்வு ஒன்றிலும் மக்கள் தேர்தலில் ஆர்வம் காட்டுவது தெரியவந்துள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட போரிஸ் ஜான்சனை பதவி விலகச் செய்தது, தற்போது போட்டியிலிருக்கும் வேட்பாளர்களின் பொருளாதாரம் குறித்த மாறுபட்ட கருத்துக்கள், கன்சர்வேட்டிவ் கட்சியினர் ஆர்வம் காட்டிய பென்னி மார்டாண்ட் மற்றும் கெமி பேடனாக்குக்கு பதிலாக இப்போது லிஸ் ட்ரஸ் முன்னணியில் நிற்பது, வேகமாக முன்னேறிய ரிஷி திடீரென பின்னடைவைச் சந்தித்தது என பல பிரச்சினைகள் இருக்கும் நிலையில், வெல்வது லிஸ் ட்ரஸ்ஸாக இருந்தாலும், ரிஷி சுனக்காக இருந்தாலும், அவர்களுடைய பதவிக்காலம் நீண்ட காலம் நீடிக்காது என்றே ஆய்வுகள் கூறுகின்றன.