நிலவறைக்குள் கேட்ட குழந்தைகளின் சத்தம்... பொதுமக்கள் புகாரையடுத்து தெரியவந்த அதிர்ச்சியளிக்கும் விடயம்
ஆஸ்திரியா நாட்டில், ஆறு பிரித்தானிய குழந்தைகளை மதுபானம் சேமித்துவைக்கும் நிலவறைக்குள் அடைத்துவைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிலவறைக்குள்ளிருந்து கேட்ட குழந்தைகளின் சத்தம்
ஆஸ்திரிய கிராமமான Obritzஇல், மதுபானம் சேமித்துவைக்கும் நிலவறை ஒன்றிற்குள்ளிருந்து குழந்தைகள் சத்தம் கேட்பதைக் கவனித்த மக்கள், அருகில் செல்லும்போதெல்லாம் சத்தம் நின்றுவிடுவதைக் கவனித்துள்ளார்கள்.
அங்கு என்ன நடக்கிறது என்று பார்க்கச் சென்ற சமூக சேவகர்கள் மீது அங்கிருந்த Tom Landon என்பவர் பெப்பர் ஸ்பிரே அடித்துத் துரத்தியுள்ளார்.
ஆகவே, அவர்கள் பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்கள்.
பொலிசார் கண்ட காட்சி
அந்த நிலவறைக்கு சென்ற பொலிசார் Tom Landon (54)ஐக் கைது செய்துள்ளார்கள். அப்போது, அந்த நிலவறைக்குள் பிரித்தானியரான 40 வயது பெண் ஒருவரும், ஆறு மாதங்கள் முதல் ஏழு வயதுவரையுள்ள ஆறு பிள்ளைகளும் இருப்பதை பொலிசார் கண்டுள்ளார்கள்.
சர்ச்சைக்குரிய முரண்பாடான கருத்துக்களை பின்பற்றக்கூடியவரான Tom, தன் மனைவி பிள்ளைகளுடன் அந்த நிலவறைக்குள் வாழ்ந்துவந்தது தெரியவந்துள்ளது.
அந்தப் பிள்ளைகள் யாரும் துஷ்பிரயோகம் செய்யப்படவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தம்பதியரிடம் பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
அந்த ஆறு பிள்ளைகளும் பிரித்தானியக் குடிமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.