பிரித்தானியாவில் நடந்த கபடி போட்டியின்போது துப்பாக்கிச்சூடு: இருதரப்பினருக்கிடையே மோதல்
பிரித்தானிய நகரமொன்றில் நடைபெற்ற கபடி போட்டியின்போது துப்பாக்கிச்சூடும், வாள் மூலம் தாக்குதலும் நடத்தப்பட்ட விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
துப்பாக்கிச்சூடு
நேற்று மாலை 4.00 மணியளவில், இங்கிலாந்திலுள்ள Derby பகுதியில் கபடி போட்டி ஒன்று நடைபெற்றுள்ளது. அப்போது, திடீரென இருதரப்பினருக்கிடையே மோதல் வெடித்துள்ளது.
அப்போது, யாரோ சிலர் துப்பாக்கியால் சுட்டதுடன், சிலர் வாளை உருவிக்கொண்டும் மோதலில் ஈடுபட, மக்கள் கலைந்து ஓடத்துவங்கியுள்ளனர்.
வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடும் காட்சிகளும், சிலர் வாளை வீசும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளதைக் காணலாம்.
கபடி விளையாட்டு வீரர்கள் வாள் வீசுவோரிடமிருந்து தப்ப தரையோடு தரையாக விழுந்துகிடக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.
பொலிசார் குவிப்பு
தகவலறிந்து சம்பவ இடத்தில் ஆயுதம் ஏந்திய பொலிசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டுள்ளனர். நடந்த தாக்குதலின்போது மூன்று பேர் காயமடைந்துள்ளார்கள். அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
CREDIT: Twitter
20க்கும் மேற்பட்ட பொலிஸ் வாகனங்கள் அங்கு அழைக்கப்பட்டதாக சம்பவத்தைக் கண்ணால் கண்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |