சுவிட்சர்லாந்தில் ஊழியர்கள் தட்டுப்பாடு நிலைமை: அதிரவைக்கும் கணக்கு
சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் 2050ல் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தட்டுப்பாடு நிலைமை ஏற்படும் அபாயம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் சூரிச் மாநிலத்தை பொறுத்தமட்டில் மொத்த மக்கள் தொகையில் 17 சதவீதம் பேர்கள் தற்போது ஓய்வுபெறும் வயதை எட்டியுள்ளனர். இந்த எண்ணிக்கையானது ஆண்டுக்கும் அதிகரித்து வருவதாகவே தெரியவந்துள்ளது.
இந்த எண்ணிக்கையானது 2050ல் 23 சதவீதத்தை எட்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளை, சூரிச் மாநிலத்தில் உழைக்கும் வயது மக்கள் தொகை விகிதம் சரிவடைந்து வருகிறது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பொருளாதாரம் மற்றும் தொழிலாளர் அலுவலகத்தின் ஆய்வின்படி, கடந்த 20 ஆண்டுகளாக நீடித்தது போன்று பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சியடைய வேண்டுமானால், 2050 ஆம் ஆண்டில் சூரிச் மாநிலத்தில் சுமார் 210,000 ஊழியர்கள் தட்டுப்பாடு ஏற்படும் என தெரியவந்துள்ளது.
இந்த ஊழியர்கள் தட்டுப்பாடு உரிய காலத்தில் ஈடு செய்யாவிடில், 2050க்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 400 பில்லியன் பிராங்குகள் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது வருவாய், வரி வசூல் மற்றும் சமூக பாதுகாப்பு நிதி ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. கொரோனா தொற்றுநோய் பரவலின் போது சுவிட்சர்லாந்தில் டிஜிட்டல்மயமாக்கல் புதிய எழுச்சியைக் கண்டது எனக் கூறும் அரசாங்க கவுன்சிலர் Carmen Walker Späh,
டிஜிட்டல்மயமாக்கல் சூரிச் மாகாணத்தில் தொழிலாளர் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் மற்றும் திறமையான தொழிலாளர்களின் பற்றாக்குறையைப் போக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குடியேறுபவர்களுக்கு அரசாங்கம் சாதகமாக இருக்க வேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள் சுவிட்சர்லாந்திற்கு வரவில்லை என்றால், தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்படும் என்பதே நிதர்சனம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறான ஒரு சூழல் உருவாகும் என்றால், ஊழியர்கள் தட்டுப்பாட்டை நீக்க உள்ளூரில் முயற்சிகளை நாம் முன்னெடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.