இதை கூடவா கள்ளச்சந்தையில் விற்பார்கள்?: பிரான்சில் தடுப்பூசி பெற விரும்பாதவர்கள் செய்யும் மோசமான செயல்
பிரான்சில் தடுப்பூசி பெற விரும்பாதவர்கள், மறுப்பவர்கள், நூற்றுக்கணக்கான யூரோக்கள் செலவிட்டு கள்ளச்சந்தையில் போலி சுகாதார பாஸ்களை (health passes) வாங்கி வருவது தெரியவந்துள்ளது.
உணவகங்கள், சில ரயில்கள் மற்றும் பொது இடங்களில் சுகாதார பாஸ் இருந்தால்தான் அனுமதி என பிரான்ஸ் தெரிவித்துள்ளதையடுத்து, ஒன்லைன் மூலம் கள்ளச்சந்தையில் போலி சுகாதார பாஸ் விற்பனை களைகட்டியுள்ளது.
இந்த சுகாதார பாஸ்கள், ஒருவர் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளார், அல்லது கொரோனாவிலிருந்து விடுபட்டுள்ளார் அல்லது கொரோனா சோதனையில் ஒருவருக்கு கொரோனா இல்லை என்பதையும் காட்டும் ஆவணமாக பயன்படுத்தப்படுகின்றன.
ஒரு பக்கம் இந்த ஆவணத்துக்கு ஆதரவு இருந்தாலும், மறுபக்கம், தடுப்பூசிக்கு எதிராக ஐந்து வாரங்களாக போராட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்களும் இருக்கிறார்கள்.
அப்படி தடுப்பூசியை எதிர்ப்பவர்களை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டு சிலர் போலி சுகாதார பாஸ்களை கள்ளச்சந்தையில் விற்கத் தொடங்கியுள்ளார்கள். அதற்கு 140 முதல் 350 யூரோக்கள் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இப்படி போலி சுகாதார பாஸ் தயாரிப்பவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் 150,000 யூரோக்கள் அபராதமும் விதிக்கப்படலாம். அத்துடன் போலி சுகாதார பாஸ் பயன்படுத்துவோர் மூன்றாண்டுகள் வரை சிறையில் செலவிட நேரிடும்.
இதுவரை போலி சுகாதார பாஸ் தொடர்பில் பலர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.