கருணை காட்டுங்கள்... அவுஸ்திரேலியாவில் மிகவும் வெறுக்கப்பட்ட நபரின் கோரிக்கை
அவுஸ்திரேலியாவில் மிகவும் வெறுக்கப்பட்ட நபராக பார்க்கப்படுவர், நீதிமன்றம் தமது விவகாரத்தில் கருணை காட்ட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
குறித்த விவகாரத்தில் விசாரணை கைதியாக உள்ள 42 வயதான ரிச்சர்ட் பாசி பொது ஒழுக்கத்தை மீறுதல், போதைப்பொருள் வைத்திருத்தல், கடுமையான காயம் ஏற்படுத்துதல் மற்றும் அதிக வேகத்தால் ஆபத்து விளைவிக்கும் பொறுப்பற்ற நடத்தை ஆகிய நான்கு குற்றச்சாட்டுகளில் தமது குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நான்கு விக்டோரியா காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்ட கிழக்கு தனிவழிப்பாதையில் ஏற்பட்ட விபத்துக்குப் பின்னர், குற்றுயிராக கிடந்த பொலிசாரை சுற்றி வந்து படம் பிடித்ததுடன் உதவ முன்வராமல், அவர்களை மோசமாக திட்டியுள்ளார்.
தற்போது விசாரணை கைதியாக உள்ள பாசி, 268 நாட்களாக பொலிஸ் காவலில் உள்ளார் எனவும், நாட்டில் உள்ள மொத்த குடிமக்களின் வெறுப்பும் கண்டனங்களையும் இவரை நோக்கியே திரும்பியுள்ளது எனவும், அவர் மீது கொஞ்சம் அனுதாபமும் கருணையும் காட்டலாம் என்ற கோரிக்கையையும் பாசியின் சட்டத்தரணி முன்வைத்துள்ளார்.
மேலும், பாசி ஒருபோதும் குற்றுயிராக கிடந்த காவலர்களை அவமதிக்கவில்லை எனவும், மொத்தமும் பொதுமக்களின் கற்பனை என்றே அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால், அந்த வாதத்தை ஏற்க மறுத்துள்ள நீதிபதி, விபத்துக்கு பின்னர் பாசியின் நடவடிக்கைகள் பொதுமக்களை மொத்தமாக தூண்டியது எனவும், அவுஸ்திரேலியாவில் மிகவும் வெறுக்கப்பட்ட நபர் கண்டிப்பாக இவராகத்தான் இருப்பார் என நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வழக்கின் விசாரணை மிக விரைவில் முடிவுக்கு வரும் எனவும், தீர்ப்பு ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் எனவும் தெரிய வந்துள்ளது.