விராட் கோலியின் இந்த முக்கிய சாதனையும் காலி! தகர்த்தெறிந்த ஸ்ரேயாஸ் ஐயர்
விராட் கோலியின் ஒரு முக்கியமான சாதனையை ஸ்ரேயாஸ் ஐயர் முறியடித்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மூன்று போட்டிகளிலும் இந்தியா அபார வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றது.
இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ஸ்ரேயஸ் ஐயர் கடைசிவரை ஆட்டமிழக்காமல் உறுதியுடன் நின்று 73 ரன்கள் குவித்து அணி வெற்றி பெற உதவினார். அதுமட்டுமின்றி இந்த தொடரில் நடந்த முதல் இரு போட்டிகளிலும் இவர் அரைசதம் கடந்து இருந்தார்.
நேற்று நடந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற இவர் தொடர் நாயகன் விருதையும் வென்று அசத்தினார். இருதரப்பு 20 ஓவர் தொடர்களில் தொடர்ச்சியாக 3 முறை அரைசதம் வீரர் என்ற சாதனையை விராட் கோலியுடன் பகிர்ந்து கொண்டார் ஸ்ரேயஸ் ஐயர்.
அதுமட்டுமின்றி 3 போட்டிகள் கொண்ட இருதரப்பு 20 ஓவர் தொடர்களில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ஸ்ரேயஸ் ஐயர் 204 ரன்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.
இதற்கு முன் 2016 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்த 3 போட்டிகள் கொண்ட இருதரப்பு 20 ஓவர் தொடர்களில் விராட் கோலி 199 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.
இதையடுத்து கோலியின் சாதனையை தட்டி தூக்கிய ஸ்ரேயாஸ் ஐயர் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.