எனது வாழ்வின் கடுமையான நாள்கள் மிகவும் வலி நிறைந்தது: ஸ்ரேயாஸ் ஐயர் உருக்கம்
இலங்கைக்கு எதிரான டி-20 தொடரில் தனது அபாரமாக ஆட்டத்தின் மூலம் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் சாதனையை முறியடித்த, இந்தியாவின் இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர், தனது வாழ்நாளின் கடினமான பக்கங்களை அவரது ரசிகர்களுக்கு பகிர்ந்துள்ளார்.
இந்தியாவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தனது அபாரமான விளையாடால் 204 ரன்களை குவித்தார்.
இதன் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் சாதனையையும் இளம் வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் முறியடித்துள்ளார்.
இந்த நிலையில் அவர் வாழ்நாளில் சந்தித்த கடுமையான பக்கங்களையும், அவர் கடந்து வந்த வலிகளையும் தனது ரசிகர்களுக்காக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அதில், கடந்த 2020ஆம் ஆண்டு நியூசிலாந்து தொடரில் பங்குபெற்று சிறப்பாக விளையாடி ரன் குவித்த போது எனக்கு மிகப்பெரிய காயம் ஏற்பட்டது.
அந்த காயத்தால் நான் டெல்லி அணியின் கேப்டன் பதவியை இழந்தேன், சிறப்பாக ரன் குவிக்க தடுமாறினேன் இருப்பினும் விளையாட்டு வீரர்களின் வாழ்வில் காயம் என்பது தவிர்க்கமுடியாதது என்பதால் அதனை துணிவுடன் எதிர்கொண்டு பெரும் போராட்டத்திற்கு பிறகு அந்த காயத்தில் இருந்து மீண்டு வந்தேன்.
ஆனால் எனது வாழ்நாளிலேயே இந்த காயம் ஏற்பட்ட தருணங்கள் மிகவும் மோசமானவை, மற்றும் உடற்தகுதியை மீண்டும் கொண்டுவருவது அதைவிடவும் மிகவும் கடினமானவை என தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெற்ற தென் ஆப்ரிக்க தொடரும் எனக்கு சிறப்பாக இல்லை, அந்த நேரத்தில் மிகவும் மோசமான வயிற்றுபோக்கு நோய்யால் அவதிப்பட்டு குறிப்பிட்ட சில நாட்களுக்குள்ளாக 6 கிலோ வரை எடை குறைந்து ரன் குவிக்க தடுமாறினேன்.
தற்போது இவை அனைத்திலிருந்தும் விடுபட்டுள்ளேன், மேலும் எனது விளையாட்டில் இப்போது என்னால் முழுக்கவனம் செலுத்தி சிறப்பாக செயல்பட முடிகிறது.
மேலும் டி20 கிரிக்கெட்டில் டாட் பந்துகள் என்பது மிகப் பெரிய குற்றச் செயல். ஆனால் கேப்டன் ரோஹித் சர்மா அணியை அபாரமாக கையாண்டு வீரர்களின் திறமையை அழகாக வெளிக்கொண்டு வருகிறார்.
அவர் மீது நான் மிகப் பெரிய மரியாதையை வைத்து இருக்கிறேன் எனவும் அந்த பேட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.