Shrinkflation: பிரித்தானிய மக்கள் எதிர்கொள்ளும் ஒரு புதிய சவால்
பிரித்தானிய மக்கள், ஏற்கனவே விலைவாசி உயர்வை எதிர்கொள்ளத் திணறிக்கொண்டிருக்கும் நிலையில், புதிதாக, Shrinkflation என்னும் ஒரு பிரச்சினையையும் எதிர்கொள்கிறார்கள்.
Shrinkflation என்பது என்ன?
இந்த Shrinkflation என்பது, உண்மையில் பல நாடுகளில் காணப்படுகிறது. விடயம் என்னவென்றால், பலர் அதை கவனிப்பதில்லை.
Shrinkflation என்பது என்னவென்றால், நுகர்வோர் வாங்கும் பொருளின் எடையை அல்லது அளவை அதிகரிக்காமல், அந்த பொருளைத் தயாரிக்கும் நிறுவனம் திடீரென அதன் விலையை அதிகரிப்பதாகும்.

சொல்லப்போனால், சில நிறுவனங்கள், பொருளின் அளவை அல்லது எடையைக் குறைத்துவிட்டு, விலையை உயர்த்துகின்றன. அதுதான் Shrinkflation என அழைக்கப்படுகிறது.
உதாரணமாக, பிரித்தானியாவில், Aquafresh Complete Care Original Toothpaste என்னும் பற்பசை, முன்பு 100 மில்லிலிற்றர் விலை 1.30 பவுண்டுகளாக இருந்தது, 2 பவுண்டுகளாக விலை உயர்த்தப்பட்டுள்ளது.
விடயம் என்னவென்றால், இப்போது அது 100 மில்லிலிற்றரிலிருந்து 75 மில்லிலிற்றராக அளவு குறைக்கப்பட்டுள்ளது.
Tesco, Sainsbury’s மற்றும் Ocado ஆகிய பல்பொருள் அங்காடிகள் இந்த விலை உயர்வைச் செய்துள்ளன.
அது உண்மையில் 100 மில்லிலிற்றருக்கு 105 சதவிகித விலை உயர்வாகும். அதேபோல, Sainsbury’s Scottish Oats, முன்பு ஒரு கிலோ பாக்கெட்டாக இருந்தது, தற்போது 500 கிராம் ஆக சுருங்கிவிட்டது.

ஆனால், விலை மட்டும் 1.25 பவுண்டுகளிலிருந்து 2.10 பவுண்டுகளாக உயர்ந்துள்ளது. இது, 100 கிராமுக்கு 236 சதவிகித விலை உயர்வாகும்!
மேலும், KitKat Two-Finger Milk Chocolate Bar, ஒரு பாக்கெட்டில் 21 பார்கள் இருந்தது, தற்போது 18ஆக குறைக்கப்பட்டுள்ளது.
ஆனால் விலை மட்டும் 3.60 பவுண்டுகளிலிருந்து 5.50 பவுண்டுகளாக உயர்ந்துள்ளது.
இதுதான், Shrinkflation!. Which? என்னும் நுகர்வோர் ஆய்வமைப்பு இந்த விவரங்களை வெளியிட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கிவரும் நிலையில், ஏற்கனவே மக்கள் கடுமையான பொருளாதார ரீதியில் அழுத்தத்தை அனுபவித்துவருகிறார்கள்.
இப்படிப்பட்ட சூழலில், உற்பத்தியாளர்களோ, அமைதியாக பொருட்களின் அளவைக் குறைத்து, விலையை உயர்த்திவருகிறார்கள்.
ஆக, இது மக்களின் கஷ்டத்தை மேலும் அதிகரிக்கும் என்கிறார், Which? அமைப்பைச் சேர்ந்த Reena Sewraz.
ஆனால், உற்பத்தியாளர்களோ, மக்கள் கஷ்டப்படுவது எங்களுக்குப் புரிகிறது. ஆனால், எங்களுக்கும் உற்பத்தி செலவு அதிகமாகியுள்ளது, உபபொருட்கள் விலை, மின்கட்டணம், போக்குவரத்துச் செலவு எல்லாமே அதிகமாகியுள்ளது, நாங்கள் என்ன செய்வது என்கின்றார்கள்!