கோலியின் சதம் வீண்... பெங்களூருவை புரட்டியெடுத்த கில், ஷங்கர்: டைட்டன்ஸ் அபாரம்
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரவெற்றி பெற்றுள்ளது.
விராட் கோலி 60 பந்துகளில் சதம்
நாணய சுழற்சியில் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. பெங்களூரு அணியின் சார்பில் அணித்தலைவர் பாப் டூ பிளசிஸ் மற்றும் விராட் கோலி முதலாவதாக களமிறங்கினர்.
அதிரடியாக துவக்கம் தந்த இந்த ஜோடியில் டூ பிளசிஸ் 28(19) ஓட்டங்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மேக்ஸ்வெல்(11), லாம்ரோர்(1) ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
விராட் கோலியுடன், ப்ரேஸ்வெல் ஜோடி சேர்ந்தார். அணியின் ரன் ரேட்டை சீராக உயர்த்திய இந்த ஜோடியில் ப்ரேஸ்வெல் 26 (16) ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.
அடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் (0) வந்ததும் வெளியேற, மறுமுனையில் அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்ட விராட் கோலி 60 பந்துகளில் தனது சதத்தினை பதிவு செய்து அசத்தினார்.
இறுதியில் விராட் கோலி 101 (61) ஓட்டங்களும், அனுஜ் ராவத் 23 (15) ஓட்டங்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில்5 விக்கெட்டுகளை இழந்து 197 ஓட்டங்கள் எடுத்தது.
கில் 52 பந்துகளை சந்தித்து 104 ஓட்டங்கள்
இதனையடுத்து 198 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. துவக்க வீரர்களாக சாஹா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். இதில் சாஹா 12 ஓட்டங்களில் வெளியேற கில்லுடன் விஜய் ஷங்கர் ஜோடி சேர்ந்து பெங்களூரு பந்துவீச்சை சிதறடித்தனர்.
விஜய் ஷங்கர் 35 பந்துகளை எதிர்கொண்டு 53 ஓட்டங்கள் குவித்து விஜய குமார் பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ம்ந்து ஷனகா(0), டேவிட் மில்லர்(6) என விக்கெட்டுகள் சரிய, கில்லுடன் தெவட்டியா களமிறங்கினார்.
இதனிடையே, சுப்மன் கில் 52 பந்துகளை சந்தித்து 104 ஓட்டங்கள் குவித்தார். குஜராத் அணி 19.1 ஓவர்களில் 198 ஓட்டங்கள் குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் பெங்களூரு அணியின் பிளே ஆப் கனவு தகர்ந்தது.