வீட்டிலிருந்தவண்ணம் வேலை செய்பவர்களுக்கு ஏற்படும் பிரச்சினை ஒன்றிற்கு ஒரு எளிய தீர்வு
இன்று உலக நாடுகள் பலவற்றில் வீட்டிலிருந்தவண்ணம் வேலை செய்வது சாதாரண விடயமாகிவிட்டது.
அதில் சில நன்மைகள் இருந்தாலும், கூடவே சில தீமைகளும் இருப்பதை மறுப்பதற்கில்லை.
அப்படி வீட்டிலிருந்தவண்ணம், அதுவும் உட்கார்ந்தபடியே வேலை செய்பவர்கள் சந்திக்கும் ஒரு பிரச்சினை, நீண்டகால முதுகுவலி!
பிரச்சினைக்கு ஒரு தீர்வு
பின்லாந்து நாட்டிலுள்ள Turku பல்கலைக்கழகத்தில் Jooa Norha என்பவர் தலைமையில், இந்த முதுகுவலி தொடர்பில் ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக உட்கார்ந்திருக்கும் நேரத்தைக் குறைப்பது, குறிப்பாக, உடல் பருமன் அதிகம் கொண்டவர்களுக்கும் உடலை அதிகம் அசைத்து வேலை செய்யாதவர்களுக்கும் உதவக்கூடும் என அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
40 முதல் 60 வயதுள்ள 64 பேர் இந்த ஆய்வுக்குட்படுத்தப்பட்டார்கள். அவர்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு, பாதி பேர் வேலை நேரத்துக்கிடையே அவ்வப்போது எழுந்து நடந்து, தொடர்ச்சியாக அமர்ந்திருக்கும் நேரத்தைக் குறைத்ததுடன், எளிய உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டார்கள்.
மற்ற பாதி பேரோ, அப்படியே வழக்கம்போல தொடர்ச்சியாக அமர்ந்து வேலை செய்ய கேட்டுக்கொண்டார்கள்.
இந்த இரண்டு குழுக்களைச் சேர்ந்தவர்களையும் ஆறு மாதங்கள் கண்காணித்தபோது, அவ்வப்போது எழுந்து நடமாடி, எளிய உடற்பயிற்சி செய்தவர்களின் முதுகு வலி அதிகரிக்கவில்லை என்பது தெரியவந்தது.
அதே நேரத்தில், எழுந்து நடமாடாமல், தொடர்ச்சியாக அமர்ந்தபடியே வேலை செய்தவர்களின் முதுகுவலியின் தீவிரம் அதிகரித்துள்ளதும் தெரியவந்தது.
ஆக, தொடர்ச்சியாக உட்கார்ந்திருக்கும் நேரத்தைக் குறைப்பது, வேலை நேரத்துக்கிடையே அவ்வப்போது எழுந்து நடப்பது, முதுகுவலி பிரச்சினைக்கு நல்ல தீர்வாக அமைந்துள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |