கடைசியில் உண்மையே வெல்லும்! செஸ் ஒலிம்பியாட்டில் புறக்கணிக்கப்பட்ட பாடலாசிரியர் அறிவு பதிலடி
தமிழகத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பாடகர் அறிவு புறக்கணிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அது தொடர்பில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா சமீபத்தில் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இவ்விழா நிகழ்ச்சியில் ஏராளமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பாடலாசிரியர் அறிவு எழுதி, சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான 'என்ஜாயி எஞ்சாமி' பாடல் அனைவரது முன்னிலையிலும் பாடப்பட்டது.
இதைப் பாடகி தீ, கிடாக்குழி மாரியம்மாள் சேர்ந்து பாடியிருந்தனர். ஆனால் இதை எழுதிப் பாடியிருந்த அறிவு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.
அவரின் பெயர் ஏன் எந்த இடத்திலும் பதிவு செய்யப்படவில்லை. இது சமூகவலைதளத்தில் விவாதத்தை கிளப்பியது.
இது தொடர்பில் அறிவு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இப்பாடலை எழுதி, கம்போஸ் செய்து பாடியது நான். இது அனைவரும் சேர்ந்து செய்த கூட்டு முயற்சிதான், அதில் சந்தேகமில்லை. ஆனால் இதை எழுதுவதற்கு யாரும் எனக்கு மெட்டுகள் தரவில்லை, ஒரு வார்த்தையைக்கூட யாரும் தரவில்லை.
கிட்டதட்ட 6 மாதங்களாக தூங்காமல் கடுமையாக இதற்காக உழைத்திருக்கிறேன். இப்பாடல் வள்ளியம்மாள் போன்ற நிலம் இல்லாத தேயிலைத் தொழிலாளர்களைப் பற்றியது மட்டுமல்ல. என்னுடைய எல்லாப் பாடல்களும் ஒடுக்கப்பட்டத் தலைமுறைகளின் வலியைப் பற்றியது.
இது போல் இன்னும் 10,000 நாட்டுப்புறப் பாடல்கள் இந்த மண்ணில் இருந்துள்ளது. இவை அனைத்தும் நம் முன்னோர்களின் வாழ்வியல், அவர்களின் நிலம் பற்றியது. இப்பாடலை இன்று அனைவரும் ஒரு அழகானப் பாடலாகப் பார்க்கிறார்கள். பல தலைமுறைகளின் வியர்வையும் இரத்தமும் கலந்த வலியைக் கேட்கும் படி இனிமையான பாடலாக உருவாக்கியுள்ளோம்.
நம் மரபுகளைப் பாடல் வழியாகக் கடத்தியுள்ளோம். நீங்கள் தூங்கும் போதுதான் உங்கள் செல்வங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன, விழித்திருக்கும்போது அல்ல. ஜெய்பீம் கடைசியில் உண்மைதான் எப்போதும் வெல்லும் என பதிவிட்டுள்ளார்.
அவரின் இந்த பதிவு வைரலான நிலையில் பலரும் அறிவுக்கு ஆதரவாக கமெண்ட் செய்து வருகின்றனர்.