லதா மங்கேஷ்கர் எப்படிபட்டவர் தெரியுமா? சிறு வயது நினைவுகளை பகிர்ந்த பாடகி சித்ரா
மறைந்த பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் குறித்து பாடகி சித்ரா தன்னுடைய இனிமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்தி திரைப்பட உலகின் மூத்த பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலையை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், இன்று காலையில் லதா மங்கேஷ்கர் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
இதையடுத்து சினிமா வட்டாரங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாடகி சித்ரா கூறியதாவது, அவங்க காலத்துல அவர் பாடிய பாடல்கள் எல்லாமே மிகவும் ரிச்சானா பாடல்கள்.
இப்போதெல்லாம் இசைப்போட்டிகள் நிறைய வருது. அதுல கலந்துக்கிற பாடகர்களோட திறமை முழுவதுமா வெளிப்படணும் அப்படின்னா அவர் பாடிய பாடல்களை பாடி கத்துக்கணும். அந்தளவுக்கு பெர்பெக்ஷனாக பாடியிருக்காங்க பாடி இருப்பாங்க.
அவங்களோட 80 வது பிறந்தநாள் அன்று, அவங்க பாடல்கள மட்டும் எடுத்து பாடி அவங்களுக்கு அனுப்பி வைச்சேன். அதை கேட்டுட்டு அவங்க எனக்கு போன் பண்ணி பாராட்டினாங்க. அது எனக்கு கிடைச்ச மிகப் பெரிய விருதா நினைக்கிறேன்.
என்னோட குழந்தை இறந்த சமயத்துல நான் எங்கேயும் போகாம வீட்டிலேயே இருந்தேன். அப்ப நிகழ்ச்சி ஒன்றுக்கு என்ன கூப்பிட்டதால் அந்த நிகழ்ச்சியில கலந்து கொண்டேன்.
நான் சோகமா இருக்கும் போதெல்லாம் லதா அவர்கள் பாடின மீரா பாடலை கேட்பேன். அதை கேட்கும் போது நான் வேற உலகத்துக்கே சென்று விடுவேன் என்று தனது சிறு வயது நினைவுகளை பகிர்ந்துள்ளார்.