பிரபல பாடகர் கே.கேவின் உடல்தகனம்! கண்ணீருடன் வழியனுப்பிய குடும்பத்தார்
மறைந்த பிரபல பாடகர் கே.கேவின் உடல் இறுதி சடங்குகள் முடிக்கப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
பிரபல பின்னணி பாடகர் கே.கே எனும் கிருஷ்ணகுமார் குன்னத் மரணமடைந்தது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது மறைவுக்கு இந்திய பிரதரமர் மோடி உட்பட பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கொல்கத்தாவில் உடற்கூறாய்வு செய்யப்பட்ட கே.கேவின் உடல், ரபீந்திர சடன் என்ற இடத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து தனி விமானம் மூலம் மும்பைக்கு கொண்டுவரப்பட்ட அவரது உடல், அந்தேரியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
பிரபலங்கள் பலரும் அங்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் வெர்சோவா இந்து தகன மைதானத்தில் இறுதி சடங்குள் நடத்தப்பட்டு, அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. கே.கேவின் உறவினர்கள் கண்ணீருடன் வழியனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில், இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், உடற்கூறாய்வு பரிசோதனை முடிந்து 72 மணி நேரத்தில் அறிக்கை வெளியாகும் என்றும், அதன் பின்னரே அவரது மரணம் தொடர்பான உண்மை தெரிய வரும் என்றும் கூறப்படுகிறது.