இலங்கை மைதான ஊழியர்களுக்கு சிராஜின் நெகிழ்ச்சி செயல்... சந்தேகப்படும் ஜாம்பவான் அர்ஜுன ரணதுங்க
இலங்கையில் பலத்த மழைக்கு நடுவே வெற்றிகரமாக முடிந்த ஆசியக் கோப்பை 2023 தொடர்பில் ஜாம்பவான் அர்ஜுன ரணதுங்க சந்தேகம் எழுப்பியுள்ளார்.
5,000 டொலர்கள் மைதான ஊழியர்களுக்கு
இலங்கையில் சமீபத்தில் நடந்து முடிந்த ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணி இலங்கையை வீழ்த்தி அபார வெற்றியை பதிவு செய்தது. கொழும்பில் நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி சேம்பியன் ஆனது.
இந்தியாவின் முகமது சிராஜ் 21 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அத்துடன் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்ட நிலையில், தமக்கு பரிசாக கிடைத்த 5,000 டொலர்கள் தொகையை மைதான ஊழியர்களுக்கே வழங்கினார்.
இது மட்டுமின்றி ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகமும் இலங்கை மைதான ஊழியர்களுக்கு 50,000 டொலர் ஊக்கத்தொகை அறிவித்தது. இப்படியான செயல்கள் வழக்கத்துக்கு மாறானது என குறிப்பிட்டுள்ள அர்ஜுன ரணதுங்க,
இதன் பின்னணி விசாரிக்க வேண்டும்
இந்திய அணி பலமுறை இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இப்படியான செயல்களில் அவர்கள் ஒருபோதும் ஈடுபட்டதில்லை. ஏன் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட இலங்கை மைதான ஊழியர்களை இதுவரை கண்டுகொண்டதில்லை.
இதன் பின்னணியில் கண்டிப்பாக ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும். இலங்கை மைதான ஊழியர்களுக்கு இலங்கை கிரிக்கெட் சங்கம் கூட இதுபோன்ற நிதியுதவி அளித்ததில்லை என குறிப்பிட்டு, ஊடகங்கள் கண்டிப்பாக இதன் பின்னணியை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
மட்டுமின்றி, இந்த நாடகங்களின் பின்னணியில், தாம் கருதுவதைவிட மிகப்பெரிய திட்டம் இருக்கலாம் என்றே நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |