சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா செல்வதாக கூறிச்சென்ற சகோதரிகள் கருணைக்கொலை: நிலவும் மர்மம்
சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்ற சகோதரிகள் இருவர் மர்மமான முறையில் மாயமான நிலையில், அவர்கள் இருவரும் கருணைக்கொலை (assisted suicide) செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளதையடுத்து அவர்களுடைய குடும்பத்தாரும் நண்பர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்
அமெரிக்காவிலுள்ள Phoenix நகரிலிருந்து, பிப்ரவரி 3ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் பேஸல் நகருக்கு சுற்றுலா சென்றுள்ளார்கள், சகோதரிகளான Lila Ammouri (54) மற்றும் Susan Frazier (49) ஆகிய இருவரும்.
Lila ஒரு மருத்துவர், Susan ஒரு செவிலியர்.
பிப்ரவரி 9ஆம் திகதிக்குப் பின் Lila மற்றும் Susanஇடமிருந்து எந்த தகவலும் இல்லாமல் போகவே, Lila மற்றும் Susanஉடைய சக பணியாளர்கள் அவர்களுக்கு மொபைலில் குறுஞ்செய்திகள் அனுப்ப, வந்த பதில் செய்தியைப் பார்க்கும்போது, அதை அனுப்பியது Lila மற்றும் Susan அல்ல, வேறு யாரோ அவர்களுக்கு பதிலாக பதில் அனுப்பியது போல் இருந்ததாக தெரிவிக்கிறார் சகோதரிகளின் நீண்ட கால நண்பரான Dr. David Bilgari.
இத்ற்கிடையில், பிப்ரவரி 15 வரை, சகோதரிகள் இருவரும் பணிக்குத் திரும்பாததால், Susan பணி செய்யும் மருத்துவமனையின் உரிமையாளர் பொலிசாருக்குத் தகவல் அளித்துள்ளார்.
Lila மற்றும் Susanஉடைய மூத்த சகோதரரான Cal Ammouri (60) மற்றும் அவர்களுடைய நண்பர்கள் அவர்களுக்கு என்ன ஆயிற்று என விசாரிக்கத் துவங்க, பிப்ரவரி 18ஆம் திகதி, சுவிட்சர்லாந்திலுள்ள அமெரிக்கத் தூதரகம், சகோதரிகள் இருவரும் கருணைக்கொலை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.
மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வாழ்ந்துவந்த சகோதரிகள், குடும்பத்தையும் நண்பர்களையும் விட்டுவிட்டு ஏன் தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என குழம்பிப்போயிருக்கிறார்கள் Cal மற்றும் அவர்களுடைய நண்பர்கள்.
Phoenix பொலிசாரோ, இது தங்கள் சட்ட எல்லைக்குட்பட்ட இடத்தில் நடந்த ஒரு சம்பவம் அல்ல என்பதால், தங்களால் அது தொடர்பாக வழக்குத் தொடர முடியாது என்று கூறிவிட்டார்கள்.
சமீபத்தில்தான் Lila வீடு ஒன்றை வாங்கியிருக்கிறார், Susanக்கு இப்போதுதான் பணி உயர்வு கிடைத்துள்ளது.
இப்படிப்பட்ட சூழலில் அவர்கள் எதற்காக தற்கொலை செய்துகொள்ளவேண்டும், கருணைக்கொலைக்கு சம்மதம் தெரிவித்து அவர்களுக்கு ஆவணங்களை நிரப்புவதற்கு உதவியது யார், அவர்களுடைய மொபைலிலிருந்து பதில் அனுப்பியது யார் என்ற பல கேள்விகளுக்கு பதில் கிடைக்காததால் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார்கள் Cal மற்றும் அவர்களுடைய நண்பர்கள்.
இவ்விடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கருணைக்கொலை என்பது, உயிர் வாழ விரும்பாதவர்கள், மருத்துவர்களின் உதவியுடன் உயிரை விடும் ஒரு நிகழ்வாகும். அதை மருத்துவர்கள் உதவியுடன் செய்துகொள்ளும் தற்கொலை என்று கூறலாம். சுவிட்சர்லாந்தில் அது சட்டப்பூர்வமானது என்பது குறிப்பிடத்தக்கது.