ரத்தன் டாடாவின் பங்களாவை ரூ.55 கோடிக்கு வாங்க உள்ள தமிழர் - யார் இந்த சிவசங்கரன்?
ரத்தன் டாடாவின் பங்களாவை தமிழர் ஒருவர் ரூ.55 கோடிக்கு வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விற்பனைக்கு வரும் டாடாவின் பங்களா
மறைந்த டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவிற்கு இந்தியா மற்றும் பல்வேறு உலக நாடுகளில் சொத்துக்கள் உள்ளது.

சீஷெல்ஸ் நாட்டின் மாஹேவில் கடற்கரையை ஒட்டிய பங்களா ரத்தன் டாடாவிற்கு சொந்தமானதாகும்.
சீஷெல்ஸ் நாட்டில் சீஷெல்ஸ் நாட்டு குடிமக்களால் மட்டுமே சொத்துக்கள் வாங்க முடியும். ஆனால் ஒரு தொழிலதிபர் மற்றும் கொடையாளர் என்ற உலகளாவிய அந்தஸ்தின் காரணமாக டாடாவுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது.
சீஷெல்ஸின் போக்குவரத்துத் தேவைகளுக்கு டாடா மோட்டார்ஸின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, 1982 ஆம் ஆண்டில் சீஷெல்ஸ் ஒரு நினைவு முத்திரையை வெளியிட்டது.
தற்போது இந்த பங்களா விற்பனைக்கு வர உள்ள நிலையில், ரத்தன் டாடாவின் உயிலை செயல்படுத்தும் அதிகாரிகளால் நியமிக்கப்பட்ட மதிப்பீட்டாளர்கள், இந்தப் பங்களாவிற்கான விலையாக ரூ.85 லட்சம் என நிர்ணயித்துள்ளனர்.

இந்த பங்களாவை ரூ.55 கோடிக்கு வாங்க சீஷெல்ஸ் நாட்டின் குடிமகனான சிவசங்கரன் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவரே சீஷெல்ஸில் இந்த பங்களாவை ரத்தன் டாடா வாங்க உதவியதாக கூறப்படுகிறது.
இந்த பங்களா விற்கப்பட்டால் அதன் மூலம் கிடைக்கும் வருமானம், மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, வருமானம் ரத்தன் டாடா நிதியம் மற்றும் ரத்தன் டாடா எண்டோமென்ட் அறக்கட்டளைக்கு இடையில் சமமாகப் பிரிக்கப்படும்.
தற்போது சீஷெல்ஸ் உச்ச நீதிமன்றத்தில் சிவசங்கரனின் திவால் நடவடிக்கைகள் நடந்து வருவதால், பங்களாவை வாங்குவது நிச்சயமற்றதாகவே உள்ளது.
“நான் ஏழை இல்லை. இந்தியாவில் பலர் நான் ஏழை என்று நினைக்கிறார்கள். இல்லை, நான் திவாலாகிவிட்டேன்.” என சிவசங்கரன் தெரிவித்துள்ளார்.
யார் இந்த சிவசங்கரன்?
தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் தாலுகா, கோவிலூர் கிராமத்தை சேர்ந்த சின்னக்கண்ணன் சிவசங்கரன், டென்னிஸ் வீரரான விஜய் அமிர்தராஜின் தந்தை ராபர்ட் அமிர்தராஜ் தொடங்கி நடத்தி வந்த ஸ்டெர்லிங் கம்ப்யூட்டர் என்கிற நிறுவனத்தை வாங்கி, குறைந்த விலையில் மக்களுக்கு கம்ப்யூட்டரைத் தந்தார்.

குறைந்த விலையில் கம்ப்யூட்டரை விற்று வந்ததால், இந்தியாவின் பெரு நிறுவனங்களில் ஒன்றாக ஸ்டெர்லிங் கம்ப்யூட்டர் மாறியது.
அதைத்தொடர்ந்து, 1999 ஆம் ஆண்டில் ஏர்செல் நிறுவனத்தை தொடங்கினார். ஏர்செல் இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமாக உருவெடுத்தது.
2005 ஆம் ஆண்டில் மலேசியாவை சேர்ந்த இலங்கை தமிழரான ஆனந்த கிருஷ்ணன் என்பவரின் மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் ஏர்செல் நிறுவனத்தின் 74% பங்குகளையும், சிந்தியா செக்யூரிட்டிஸ் அன்ட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனம் 26% பங்குகளையும் வாங்கியது.

2018 ஆம் ஆண்டில் நிதி சிக்கல் காரணமாக ஏர்செல் திவால் நிலைக்கு விண்ணப்பித்தது.
இது குறித்து பேசிய சிவசங்கரன், நான் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு ஏர்செல்லை விற்க சிலரால் கட்டாயப்படுத்தப்பட்டேன். ஏர்செல் நிறுவனத்தை நான் விற்றதால் எனக்கு வெறும் ரூ.3,400 கோடி மட்டுமே கிடைத்தது. ஆனால், ஏடி&டி (AT&T) நிறுவனத்துக்கு நான் ஏர்செல் நிறுவனத்தை விற்றிருந்தால், எனக்கு 8 பில்லியன் டாலர் கிடைத்திருக்கும்" என தெரிவித்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |