மூழ்கிய காருக்குள் எலும்புக்கூடுகள்... 17 ஆண்டுகளுக்கு பிறகு வெளிச்சத்துக்கு வந்த சம்பவம்
அயர்லாந்தில் மூழ்கியிருந்த காரில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகள் 2004ல் காணாமல் போன இளைஞரின் மிச்சங்கள் என பொலிசாரால் அடையாளம் காணப்பட்டுள்ளன.
கிராஸ்ஹேவன் பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்த எலும்புக்கூடுகள் 23 வயது Barry Coughlan என்பவரது என டி.என்.ஏ சோதனையின்மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மீனவரான Barry Coughlan கடந்த 2004 மே 1ம் திகதியில் இருந்தே காணாமல் போயுள்ளார். கடைசியாக கிராஸ்ஹேவனில் உள்ள மூண்டஸ்டர் மதுபான விடுதியில் இவரை கண்டுள்ளதாக தெரிய வந்தது.
தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் எந்த முன்னேற்றமும் இன்றி பொலிசார் தடுமாறினர். இளைஞர் மாயமான சம்பவத்தில் கருத்து கூறியிருந்த குடும்பத்தினர்,
பணிக்கு திரும்ப அவர் தயாரான நிலையில், இச்சம்பவம் நடந்துள்ளதாக தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் கடந்த மே 26ம் திகதி தன்னார்வலர்கள் சிலர் முன்னெடுத்த தீவிர தேடலில், குறித்த இளைஞர் பயன்படுத்தியதாக கூறும் சிவப்பு நிற வாகனத்தை கண்டுபிடித்துள்ளனர்.
தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் தெரியப்படுத்தியதை அடுத்து, அப்பகுதி முழுவதும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த நிலையிலேயே குறித்த இளைஞரின் மரணம் தொடர்பில் பொலிசார் உறுதி செய்துள்ளனர்.
இதுவரை மாயமானதாக கருதி இருந்த குடும்பத்தினர், இளைஞரின் மரணம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இறுதிச்சடங்குகளை முன்னெடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.