காலை உணவைத் தவிர்ப்பதால் உடல் இயக்கத்தில் நடைபெறும் மாறுதல்கள் என்னென்ன தெரியுமா?
உலக அளவில், காலை உணவைத் தவிர்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதாக கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன. உடல் எடையை குறைக்கிறேன், சாப்பிட நேரமில்லை என இதற்கு பல காரணங்களை பலரும் சொல்கின்றனர்.
காலை உணவைத் தவிர்ப்பதால் நமது உடல் இயங்கியலில் நடைபெறும் மாறுதல்கள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து காண்போம்.
சர்க்கரை நோய் அபாயம்
காலை உணவைத் தவிர்ப்பதால், குளுக்கோஸ் வளர்சிதை சுழற்சியில் பாதிப்பு ஏற்பட்டு சர்க்கரை நோய் உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். காலையில் சாப்பிடாமல் இருக்கும்போது, குளுக்கோஸ்-இன்சுலின் சார்ந்த செயல்பாடுகள் குறையும். அதன் பிறகு மதிய உணவின் மூலம் கிடைத்த அதிக குளுக்கோஸை ஈடுகட்ட, அதிகமாக இன்சுலின் சுரந்து, தொடர்ந்து மாற்றங்கள் நிகழும். சில மாதங்கள் கழித்து இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் ஏற்பட்டு, சர்க்கரை நோயாளியாக மாறிவிட வாய்ப்புள்ளது.
ஹார்மோன் மாற்றம்
உணவைத் தவிர்ப்பதால் உடலில் சுரக்கும் ’டோபமைன்’ (Dopamine) மற்றும் செரடோனின் (Serotonin) ஹார்மோன்களின் அளவுகள் குறையும். இந்த இரண்டு ஹார்மோன்களும் மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவுபவை. இதன் காரணமாக பிறரிடம் எரிச்சல், நிதானமின்மை போன்ற குறிகுணங்கள் போகப் போக வெளியாகத் தொடங்கும்.
வாய் நாற்றம்
காலை உணவை மென்று சாப்பிடும்போது, எச்சில் சுரப்பில் உள்ள லைஸோசைம் (கிருமிநாசினி செய்கையுடையது), வாய்ப் பகுதியில் மையமிட்டுள்ள நுண்கிருமிகளை அழிக்கும். அதுவே உணவைச் சாப்பிடாவிட்டால், கிருமிநாசினியின் ஆதரவின்றி, வாய்ப் பகுதியில் கிருமிகளின் ஆதிக்கம் அதிகரித்து, விரைவில் வாய்நாற்றம் ஏற்படும்.
உடல் எடை கூடி பருமன்
உடல் எடையைக் குறைப்பதற்காக காலை உணவைத் தவிர்ப்பவர்கள், அடுத்தவேளை அளவுக்கதிகமாக சாப்பிடுவார்கள். அதுமட்டுமில்லாமல் இடையில் உட்செல்லும் நொறுவைகளும் அதிகமாகும். இதனால் உடலுக்கு கிடைக்கும் கலோரிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதன்மூலம் உடல் எடை உயருமே தவிர, குறைவது கடினம்.