தண்ணி காட்டிய வங்கதேசத்திற்கு செக் வைத்த இலங்கை! டிராவில் முடிந்த டெஸ்ட்
இலங்கை-வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்துள்ளது.
வங்கதேசத்தின் சாட்டோகிராமில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 397 ஓட்டங்கள் குவித்தது. ஏஞ்சலோ மேத்யூஸ் 199 ஓட்டங்களும், சண்டிமல் 66 ஓட்டங்களும், குசால் மெண்டிஸ் 54 ஓட்டங்களும் எடுத்தனர். வங்கதேச அணி தரப்பில் நயீம் 6 விக்கெட்டுகளும், ஷாகிப் அல் ஹசன் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய வங்கதேசம் 465 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது. தமிம் இக்பால் 133 ஓட்டங்களும், ரஹிம் 105 ஓட்டங்களும், லித்தான் தாஸ் 88 ஓட்டங்களும் எடுத்தனர். இலங்கை அணி தரப்பில் ரஜிதா 4 விக்கெட்டுகளும், அசிதா பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, கடைசி நாளான இன்று 6 விக்கெட் இழப்புக்கு 260 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது போட்டி டிராவில் முடிவதாக அறிவிக்கப்பட்டது.
இலங்கை அணியில் டிக்வெல்லா 61 ஓட்டங்களுடனும், சண்டிமல் 39 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். அணித்தலைவர் கருணாரத்னே 52 ஓட்டங்கள் எடுத்தார். வங்கதேச அணி தரப்பில் டைஜூல் இஸ்லாம் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஏஞ்சலோ மேத்யூஸ் ஆட்டநாயகன் விருதினை தட்டிச் சென்றார். இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டாக்காவில் 23ஆம் திகதி தொடங்க உள்ளது.