டிராவிட் மட்டும் இல்லைனா... பாராட்டி தள்ளிய இலங்கை கிரிக்கெட்!
இந்திய அணி இலங்கைக்கு வந்து இரண்டு தொடர்கள் விளையாடிய நிலையில், இந்த சுற்றுப் பயணத்தை தொடர்ந்து உறுதி செய்ததற்காக, பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டிற்கு இலங்கை கிரிக்கெட் பாராட்டியுள்ளது.
ஷிகார்தவான் தலைமையிலான இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.
இதில் ஒருநாள் தொடரை இந்தியாவும், டி20 தொடரை இலங்கை அணியும் கைப்பற்றியது. இதில் டி20 தொடரின் போது, இந்திய அணி வீரர் க்ருணல் பாண்ட்யா கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.
இதனால் டி20 தொடர் எங்கு இடையில் நிறுத்தப்பட்டுவிடுமோ என்ற அச்சம் நிலவியது. இருப்பினும் அவருடன் தொடர்பில் இருந்த 8 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, மற்ற வீரர்கள் மீதமுள்ள 2 டி20 போட்டிகளில் விளையாடி, தொடரை முடித்து கொடுத்தனர்.
இந்த தொடர் முழுவதுமாக நடந்ததன் மூலம், இலங்கை கிரிக்கெட்டிற்கு நூறு கோடி ரூபாய் வருமான ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், இந்தியா-இலங்கை தொடரின் போது கொரோனா பாதிப்பு இருந்த போதிலும், இந்த தொடரை முழுவதுமாக நடப்பதற்கு உறுதி செய்த ராகுல் டிராவிட்டை இலங்கை கிரிக்கெட் பாராட்டியுள்ளது.
இது குறித்து இலங்கை கிரிக்கெட் நிர்வாகி கூறுகையில், இந்த தொடரின் போது நிலைமையை புரிந்து கொண்டு, இலங்கை கிரிக்கெட் எடுக்கும் முயற்சிகளை, கருத்தில் கொண்டு இந்திய அணியின் பயிற்சியாளர் மற்றும் அணி குழுவினர் தொடரை தொடர் முடிவு செய்தனர்.
பயிற்சியாளர் நினைத்திருந்தால், அணியை இந்தியாவிற்கு எளிதாக அழைத்துச் சென்றிருக்கலாம். ஆனால் அவர் மிகவும் இணக்கமாக நடந்து கொண்டார். நிலைமையை புரிந்து கொண்டார்.
நாங்கள் எடுக்கும் முயற்சிகளை அவர் பாராட்டினார். அதுமட்டுமின்றி கொரோனாவில் இருந்து வீரர்களை பாதுகாக்க நாங்கள் எங்களால் முடிந்த அளவிற்கு அனைத்தையும் செய்கிறோம் என்பதை அவர் உணர்ந்து கொண்டார்.
இந்த சுற்றுப்பயணம் எங்களுக்கு மிகவும் மதிப்புமிக்க சுற்றுப்பயணமாக இருந்தது. இதை நாங்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்து கொண்டிருந்தோம்.
ஏனெனில், மூன்று கூடுதல் டி 20 விளையாடுவதற்கான எங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிசிசிஐ உயரதிகாரிகளான ஜெய் ஷா மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோருக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருந்தோம்.
முதலில் சுற்றுப்பயணம் மூன்று ஒருநாள் போட்டிகளுக்கு மட்டுமே. அதன் பின் டி20 தொடரை சேர்த்தோம்.
இதன் மூலம் நாங்கள் கிட்டத்தட்ட 14.5 மில்லியன் டொலர் சம்பாதித்தோம். இது எங்கள் நிதிக்கு ஒரு பெரிய ஊக்கமாகும் என்று அவர் கூறியுள்ளார்.