நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்க.. இலங்கை கிரிக்கெட் வாரியம் எடுத்துள்ள முக்கிய முடிவு
இலங்கை-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டிகளின் டிக்கெட் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தை, பொருளாதார நெருக்கடியில் உள்ள மக்களுக்கு வழங்க இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளது.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது. இலங்கை-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாளை கொழும்பில் நடக்கிறது.
இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் வாரியத்தின் நிர்வாக அதிகாரிகள் ஊடகவியலாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய செயலாளர் மொஹான் டி சில்வா, இரு அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் டிக்கெட்டுகளில் கிடைக்கும் வருமானம் அனைத்தையும் பொருளாதார நெருக்கடியில் உள்ள நாட்டு மக்களுக்கு வழங்க இலங்கை கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.
Image Credits: ICC
இதுகுறித்து மேலும் பேசிய அவர், 'இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் திரு.ஷம்மி சில்வா அவர்கள் எம்முடன் கலந்துரையாடி இந்தச் டிக்கெட்டுகளின் மூலம் கிடைக்கும் வருமானம் முழுவதையும் எமது மக்களின் நலனுக்காக வழங்கத் தீர்மானித்தார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த இலங்கை கிரிக்கெட் நிர்வாக குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. இந்த போட்டியை வெற்றிகரமாக நடத்துவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் எங்களுக்கு பெரும் ஆதரவை வழங்குவார்.
இந்த போட்டித் தொடர் இலங்கை கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல, இது முழு நாட்டிற்கும் முக்கியமானது. இந்த போட்டியின் மூலம் சுமார் இரண்டரை மில்லியன் டொலர்களை நாம் சம்பாதிக்கிறோம். குறிப்பாக நமது நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்க இது உதவுகிறோம். அந்த பணம் அனைத்தும் நாட்டில் பயன்படுத்தப்படும்' என தெரிவித்துள்ளார்.
Image Credit: Twitter(@OfficialSLC)