கடைசி பந்தில் ரன்அவுட்! ஒரு ரன்னில் த்ரில் வெற்றி..இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இலங்கை
இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கையின் இனோக சிறந்த வீராங்கனை விருதை பெற்றார்
பாகிஸ்தானின் நஸ்ரா சந்து 17 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்
மகளிர் ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
சில்ஹெட்டில் நடந்த இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் மகளிர் இலங்கை அணியும், பாகிஸ்தான் அணியும் மோதின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
கேப்டன் அதப்பத்து 10 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் அனுஷ்கா 26 ஓட்டங்களும், மாதவி 35 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 122 ஓட்டங்கள் எடுத்தது.
பாகிஸ்தான் தரப்பில் நஸ்ரா சந்து 3 விக்கெட்டுகளையும், சதியா, நிதா மற்றும் ஐமன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீராங்கனைகள் சிட்ரா அமீன் 9 ஓட்டங்களும், முனீபா அலி 18 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் களமிறங்கிய ஓமைம சொஹைல் 10 ஓட்டங்கள் எடுத்த நிலையில் கவிஷா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். எனினும் பொறுப்புடன் ஆடிய கேப்டன் பிஸ்மா மஃரூப் 42 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.
Twitter
கடைசி கட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி ஒரு பந்தில் இரண்டு ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், நிதா தர்-ஐ இலங்கையின் கவிஷா மற்றும் அனுஸ்கா ரன்அவுட் செய்தனர்.
Twitter
இதன்மூலம் ஒரு ரன் வித்தியாசத்தில் இலங்கை அணி த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இலங்கை அணி 15ஆம் திகதி இந்திய அணியை எதிர்கொள்கிறது.