இந்திய வம்சாவளியினர் உட்பட சாலையில் பலியான பல உயிர்கள்: கால தாமதமானாலும் பிரித்தானியா எடுத்துள்ள நல்ல முடிவு
பிரித்தானியாவின் ‘ஸ்மார்ட்’ நெடுஞ்சாலைகள் வாங்கிய பலிகள் ஒன்று இரண்டல்ல...
ஸ்மார்ட் நெடுஞ்சாலை ஒன்றில் கார் ஒன்று திடீரென பழுதாகி நின்றபோது, வேகமாக வந்த ட்ரக் மோதி அந்த காரிலிருந்த சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே பலியானான்.
இந்திய வம்சாவளி தம்பதியரான மீரா, திலேஷ் நரன் தம்பதியரின் மகனான தேவ் நரன் (8)தான் அந்த சிறுவன்.
ஏற்கனவே, அகமது (36) என்பவரும், Sheffieldஐச் சேர்ந்த Nargis Begum (62) என்பவரும், இதேபோல் ஸ்மார்ட் சாலையில் திடீரென கார் பழுதானபோது கொல்லப்பட்டவர்கள் ஆவர். மொத்தத்தில் 2019 வரையிலான நான்கு ஆண்டுகளில் 53 பேர் சாலை விபத்துக்களில் உயிரிழந்துள்ளார்கள். அவர்களில் 18 பேர் இந்த ஸ்மார்ட் சாலை பிரச்சினையால் உயிரிழந்தவர்கள்.
ஸ்மார்ட் சாலை என்பது, நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு வழிச்சாலை மட்டும், கூட்ட நெரிசலுக்கேற்றாற்போல் பயன்பாட்டுக்கு விடப்படும். மற்றபடி, அவசர காலத்தில், அதாவது வாகனத்தில் பயணம் செய்யும்போது, திடீரென அந்த வாகனம் பழுதானால், அந்த வாகனத்தை நிறுத்துவதற்கு அந்த சாலையை பயன்படுத்திக்கொள்ளலாம்.
அப்படி, வாகனங்கள் நிறுத்தப்படும் பட்சத்தில், தொழில்நுட்பத்தின் உதவியால், அங்கு வாகனம் ஒன்று பழுதாகி நிற்பதை கவனிக்கும் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் அலுவலர்கள், அந்த சாலை, பயன்பாட்டில் இல்லை என்பதைக் காட்டும் சிக்னலை கொடுப்பார்கள்.
ஆனால், அந்த தொழில்நுட்பம் இன்னமும் சரியாக பயன்பாட்டுக்கு வரவில்லை.
அத்துடன், இதுபோன்ற நேரத்தில், பழுதான வாகனத்தை நிறுத்துவதற்கென்று, சாலையோரமாக ஒரு இடம் அமைக்கப்பட்டிருக்கும். அது hard shoulder என்று அழைக்கப்படும்.
ஆனால், இந்த hard shoulderகள் ஸ்மார்ட் சாலைகள் அமைக்கப்படுவதன் காரணமாக, தேவையில்லை என கருதப்பட்டு அகற்றப்பட்டுவிட்டன.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே அவை அகற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
எதிர்ப்பையும் மீறி hard shoulderகள் போக்குவரத்துத் துறை அதிகாரிகளால் அகற்றப்பட்டு, ஸ்மார்ட் சாலைகள் அமைக்கப்பட்ட நிலையில், உயிர் பலிகளைத் தடுக்க முடியவில்லை.
இந்நிலையில், இன்று பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்மார்ட் சாலைகள் அமைக்கப்படுவது நிறுத்தப்படவேண்டும் என அறிவித்திருக்கிறார்கள்.
பல உயிர்கள் சாலைகளில் பலியாகிவிட்டது துயரத்திற்குரிய ஒன்றுதான், சம்பந்தப்பட்டவர்களது குடும்பத்தினருக்கு ஈடு செய்ய முடியாத இழப்புதான்.
ஆனாலும், இப்போதாவது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஸ்மார்ட் சாலைக்கு விதித்துள்ள தடை, எதிர்காலத்தில் மேலும் விலை மதிப்பற்ற உயிர்கள் இழப்பை தவிர்க்கும் என்பது நிச்சயம்!