ஸ்மார்ட்போனில் பேட்டரி 100 சதவீதம் சார்ஜ் ஆன பிறகும் மின்சார இணைப்பில் இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா?
ஸ்மார்ட்போன் பேட்டரிகள் நீண்ட நேரத்திற்கு நிற்கவில்லை, சீக்கிரமாகவே சார்ஜ் தீர்ந்து விடுகிறது என இன்றைய தலைமுறையினர் அதிகம் புலம்புவதை பார்க்கலாம்.
ஸ்மார்ட்போன்களை இடைவெளி இன்றி பயன்படுத்தி விட்டு சார்ஜ் நிற்கவில்லை என கூறுபவர்கள் ஏராளம்.
அதிலும், இரவு முழுவதும் செல்போனிற்கு சார்ஜ் போட்டு விட்டு உறங்க செல்கின்றனர்.
இப்படி இரவு முழுவதும் சார்ஜ் ஏறும் செல்போன்கள் வெடித்து விடும் என சிலர் அச்சம் கொள்வதுண்டு. சில நேரங்களில் சார்ஜ் ஏறிக் கொண்டு இருக்கும் பொழுதே செல்போன் வெடிப்பதோ அல்லது சேதமடைந்து போவதற்கோ வாய்ப்புகள் உண்டு.
ஆனால், அவை மூன்றாம் தரப்பு சார்ஜரை தொடர்ந்து பயன்படுத்தும் பொழுது நிகழலாம்.
இன்றைய காலத்தில் ஸ்மார்ட்போன்களுக்கு சார்ஜ் போடும் பொழுது 100 சதவீதம் சார்ஜ் ஏறிய பிறகும் தொடர்ந்து சார்ஜர் இணைப்பில் இருந்தால் வெடித்து விடுமோ என்ற ஐயம் தேவையில்லை.
அதிகபட்சமாக 3 முதல் 4 மணி நேரத்தில் ஸ்மார்ட்போன்கள் 100% சார்ஜ் ஏறி விடுகின்றன. இரவில் 6 முதல் 7 மணி நேரம் சார்ஜ் தொடர்ந்து இணைப்பில் இருப்பது ஆபத்தில்லை என்கிறார்கள்.
நாம் உபயோகப்படுத்தும் செல்போன் மற்றும் லேப்டாப் உள்ளிட்ட உபகரணங்களில் லித்தியம்-அயான்(li-io) பேட்டரி பயன்படுத்தப்படுகின்றன.
செயல்திறன் மிக்க லித்தியம் அயான் பேட்டரி வகையில் 98% அளவிற்கு சார்ஜ் ஏறிய பிறகு மின்னோட்டத்தின் வேகம் குறையத் துவங்கும்.
அதன் பின்னர் 100%-ஐ முழுமையாக அடைந்த பிறகு மின்னோட்டமானது முழுவதுமாக நிறுத்தப்படும்.
முன்பு பயன்படுத்தப்பட்ட லித்தியம் கார்பனேட் உள்ளிட்ட பேட்டரி வகைகளில் அதிக நேரம் சார்ஜ் ஏறினால் வெடிப்பது போன்ற பிரச்சனைகள் இருந்து இருக்கலாம். தற்பொழுது அதுபோன்ற ஐயங்கள் தேவையில்லை.