அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்: கடத்தல் பாணியை மாற்றிய ஆட்கடத்தல்காரர்கள்
பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் சிறுபடகுகள் மூலம் நுழையும் புலம்பெயர்ந்தோர் இப்போது பெரிய படகுகளை பயன்படுத்தத் துவங்கியுள்ளார்கள்.
பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் சட்ட விரோத புலம்பெயர்வோரை தடுத்து நிறுத்த இருதரப்பும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுவரும் நிலையில், ஆட்கடத்தல்காரர்களும் புதிய நடவடிக்கைகளை துவக்கியுள்ளார்கள்.
சிறுபடகுகள் மூலம் நுழையும் புலம்பெயர்ந்தோர்?
பிரித்தானியாவைப் பொருத்தவரை, சட்ட விரோத புலம்பெயர்வோர் முன்பு லொறிகள் மூலம் பிரித்தானியாவுக்கு நுழைந்துவந்தார்கள்.
அரசு கட்டுப்பாடுகளை கடுமையாக்கியதால், சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழையத் துவங்கினார்கள்.

அப்படி ஆங்கிலக்கால்வாய் வழியாக சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைவோரைத் தடுப்பதற்காக பிரித்தானியா பிரான்சுக்கு 662 மில்லியன் பவுண்டுகள் கொடுக்க முன்வர, பிரான்ஸ் தரப்பு கட்டுப்பாடுகளை கடுமையாக்கிவருகிறது.
விடயம் என்னவென்றால், ஆட்கடத்தல்காரர்களும் அதற்கு ஈடாக தங்கள் கடத்தல் பாணியை மாற்றிவருகிறார்கள்.
ஆம், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் புலம்பெயர்வோரைக் குறித்து குறிப்பிடும்போது, ’சிறுபடகுகளை தடுத்து நிறுத்துதல்’ என்றே அது குறிப்பிடப்படுகிறது.
ஆனால், இப்போது சிறுபடகுகள் அல்ல, பிரம்மாண்டமான பெரிய படகுகளை பயன்படுத்தத் துவங்கியுள்ளார்கள் ஆட்கடத்தல்காரர்கள்.
அதற்கு ஆதாரமாக, செவ்வாய்க்கிழமையன்று, 173 புலம்பெயர்வோர் பயணித்த படகொன்றின் எஞ்சினில் தீப்பற்றிய விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியது நினைவிருக்கலாம்.

ஆக, பிரான்சிலிருந்து சட்டவிரோதமாக புலம்பெயர்வோரை, சிறுபடகுகள் மூலம் கொஞ்சம் கொஞ்சம் பேராக ஆங்கிலக்கால்வாய் வழியாக அனுப்பிவந்த ஆட்கடத்தல்காரர்கள், இப்போது ஒரே நேரத்தில் நூறுக்கும் அதிகமானோர் பயணிக்கும் பெரிய படகுகளை பயன்படுத்தத் துவங்கியுள்ளார்கள்.
அதுமட்டுமின்றி, வழக்கமாக புலம்பெயர்வோர் பிரான்சிலிருந்து புறப்படும் இடங்கள் மட்டுமின்றி, பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் நாட்டு கடற்கரைகளில் வெவ்வேறு இடங்களிலிருந்து புலம்பெயர்வோரை படகுகள் மூலம் பிரித்தானியாவுக்கு அனுப்புவதும் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக டெய்லி மெயில் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |