ஜனவரி 1 முதல்... சுவிட்சர்லாந்தில் அறிமுகமாகும் புதிய விதி
சுவிட்சர்லாந்தில், 2024ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல், புதிதாக கட்டப்படும் வீடுகளின் கூரைகளில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் தகடுகளை கட்டாயம் பொருத்தவேண்டும் என்னும் விதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
சூரிய சக்தி மின்சார தயாரிப்பை அதிகப்படுத்த திட்டம்
சுவிட்சர்லாந்தில், சூரிய சக்தி மூலம் மின்சார தயாரிப்பை அதிகப்படுத்த அரசு தீவிரமாக திட்டமிட்டு வருகிறது. அதற்காக புதிய விதிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
குறிப்பாக, வீடுகளின் கூரை, 300 சதுர மீற்றருக்கு அதிக பரப்பைக் கொண்டதாக இருக்கும்பட்சத்தில், அத்தகைய வீடுகளின் கூரைகளில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் தகடுகளை, அதாவது சோலார் பேனல்களை பொருத்துவது கட்டாயமாக்கப்பட உள்ளது.
அதே நேரத்தில், பழைய வீடுகள் புதுப்பிக்கப்படும்போது, அவற்றின் கூரைகளிலும் சோலார் பேனல்களை பொருத்தவேண்டும் என்னும் யோசனையை சுவிஸ் நாடாளுமன்றம் நிராகரித்துவிட்டது.
வாகன நிறுத்துமிடங்கள் அல்லது பார்க்கிங் செய்யும் இடங்களின் கூரைகளில் சோலார் பேனல்கள் பொருத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 2030வாக்கில், பெருமளவில் சூரிய சக்தியை பயன்படுத்தும் வகையில் கட்டிடங்கள் அமைக்கப்படவேண்டும் என்பதே சுவிஸ் அரசின் நோக்கமாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |