வீட்டின் கூரையை பிய்த்துக்கொண்டு சமையலறையில் விழுந்த பிரித்தானிய ராணுவ வீரர்: திக் திக் நிமிடங்கள்
பயிற்சியின் போது விமானத்தில் இருந்து குதித்த பிரித்தானிய ராணுவ வீரர் ஒருவர் வீட்டின் கூரையை பிய்த்துக்கொண்டு சமையலறையில் விழுந்து உயிர் தப்பியுள்ளார்.
மரணத்தை ஏமாற்றியுள்ள அந்த வீரர் 15,000 அடி உயரத்தில் விமானத்தில் இருந்து குதித்துள்ளார். பொதுவாக எதிரி நாட்டுப் பிராந்தியங்களில் ரகசியமாக நுழைய இந்த திட்டங்களை ராணுவத்தினர் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் சம்பவத்தின் போது குறித்த ராணுவ வீரரின் பாராசூட் திறக்காமல் சிக்கிக்கொள்ளவே அவர் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள Atascadero பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டின் மீது விழுந்துள்ளார்.
உடனடியாக அப்பகுதி மக்கள் 911 இலக்கத்திற்கு தகவல் அளித்துள்ளனர். செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி 4.55 மணியளவில் இச்சம்பவம் நடக்கும் போது அந்த வீட்டின் உரிமையாளர் அங்கு இல்லை என்றே பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.
வீட்டின் கூரையில் மோதி, சமையலறையில் விழுந்திருந்த அந்த ராணுவ வீரரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.
லேசான காயங்களுடன் தப்பிய அந்த வீரர் பிரித்தானியர் என்பதையும் உறுதி செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு பின்னர் முழு தகவலும் வெளிவரும் என கூறப்படுகிறது.