நாடுகடத்தப்படுவதிலிருந்து தப்பிய புலம்பெயர்ந்தோருக்கு அடுத்த அதிர்ச்சியைக் கொடுத்துள்ள பிரித்தானியா...
ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தின் தலையீட்டால், ருவாண்டாவுக்கு நாடுகடத்தப்பட இருந்த புகலிடக் கோரிக்கையாளர்களின் விமானம் கடைசி நேரத்தில் ரத்துசெய்யப்பட்ட நிலையில், புலம்பெயர்ந்தோருக்கு மற்றொரு அதிர்ச்சியை அளித்துள்ளது பிரித்தானிய உள்துறைச் செயலகம்.
பிரித்தானியாவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்தவர்களை எப்படியாவது தண்டிக்கவேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டுள்ளார் உள்துறைச் செயலரான பிரீத்தி பட்டேல்.
அதன்படி, சட்ட விரோத புலம்பெயர்ந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் ஒரு திட்டம் தயாரானது. நாடு கடத்தப்படுபவர்களுக்கு அது குறித்த நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அவர்கள் நாடுகடத்தப்பட இருந்த நேரத்தில், ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தின் தலையீட்டால், ருவாண்டாவுக்கு நாடுகடத்தப்பட இருந்த புகலிடக் கோரிக்கையாளர்களின் விமானம் கடைசி நேரத்தில் ரத்துசெய்யப்பட்டது.
ஆனாலும், தன் நிலைப்பாட்டில் தான் உறுதியாக நிற்பதாக தெரிவித்த பிரீத்தி, சட்ட விரோத புலம்பெயர்ந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் திட்டத்திலிருந்து தாங்கள் சற்றும் பின்வாங்கமாட்டோம் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், நாடுகடத்தப்படுவதிலிருந்து தப்பிய சட்ட விரோத புலம்பெயர்ந்தோருக்கு மீண்டும் அதிர்ச்சியை அளிக்கும் ஒரு செய்தியை உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஆம், அபாயகரமான மற்றும் தேவையற்ற வழிகளில் பிரித்தானியாவுக்குள் நுழைந்தவர்களில் பிரித்தானியாவிலிருந்து வெளியேற்றப்பட உள்ளவர்களுக்கு மின்னணுப் பட்டைகளை அணிவிக்க பிரித்தானியா முடிவு செய்துள்ளது.
12 மாத சோதனை முயற்சியாக துவக்கப்படும் இந்த திட்டத்தின்படி, முதலில் மின்னணுப்பட்டைகள் அணிவிக்கப்பட இருப்போர், தற்போது ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தின் தலையீட்டால் ருவாண்டாவுக்கு நாடுகடத்தப்படுவதிலிருந்து தப்பியவர்கள் ஆவர்.
அப்படி மின்னணுப் பட்டைகள் அணிவிக்கப்படுவோருக்கு வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். கட்டுப்பாடுகளுக்கு இணங்காதவர்கள் சிறையில் அடைக்கப்படலாம், தண்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடுகடத்தப்பட இருப்பவர்கள் நாட்டிலிருந்து தப்பியோடுவதைத் தவிர்ப்பதற்காக இந்த திட்டம் அமுல்படுத்தப்பட இருப்பதாக கூறப்படும் நிலையில், சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு மட்டும் இந்த மின்னணுப்பட்டைகள் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.