பாகிஸ்தானுக்கு செல்ல பயப்படும் ஆஸ்திரேலிய வீரர் - என்ன காரணம் தெரியுமா?
தான் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய அணியில் பங்கேற்கும் வாய்ப்பு குறைவு தான் என அந்த அணி வீரர் ஹேசில்வுட் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வரும் மார்ச் மாதம் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. ஆஸ்திரேலியாவின் இந்த சுற்றுப் பயணம் உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரணம் கடந்த 1998ஆம் ஆண்டு மார்க் டய்லர் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானில் விளையாடியது. அதன்பின் 24 ஆண்டுகள் கழித்து தற்போது தான் பாகிஸ்தானில் நடக்கும் தொடரில் அந்த அணி பங்கேற்கிறது.
அதேசமயம் கடந்த 2009ஆம் ஆண்டு பாகிஸ்தானில் விளையாடிய இலங்கை அணி மீது நடந்த தீவிரவாதத் தாக்குதல் காரணமாக அந்த நாட்டிற்கு செல்வதை பல கிரிக்கெட் அணிகளும் தவிர்த்து வந்தன. அதன்பின் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாதுகாப்பு அம்சங்களை உயர்த்தி ஜிம்பாப்வே, இலங்கை போன்ற சிறிய நாடுகளை தங்கள் நாட்டிற்கு வரவழைத்து கிரிக்கெட் தொடரில் விளையாடியது.
கடைசியாக கடந்த 2021ஆம் ஆண்டு இதேபோல பல வருடங்கள் கழித்து பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி அங்கு அந்த அணிக்கு எதிராக கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இருந்தது. ஆனால் போட்டிக்கு சில மணி நேரங்கள் முன்பாக நியூசிலாந்து அணிக்கு தீவிரவாத மிரட்டல் விடுக்கப்பட்டதால் பாதுகாப்பு காரணங்கள் கருதி அந்த பயணம் ரத்து செய்யப்பட்டது.
இதே முடிவை காரணம் காட்டி அடுத்த சில வாரங்களில் தங்கள் அணி பங்கேற்க இருந்த கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து ரத்து செய்தது. இதனிடையே பாகிஸ்தானில் நிலவும் இந்த பதட்டமான சூழ்நிலைகளால் அந்நாட்டுக்கு செல்ல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் தயங்குவதாக கடந்த வாரம் ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற “தி சிட்னி மார்னிங் ஹெரால்ட்” பத்திரிகையில் செய்திகள் வெளியானது.
இந்நிலையில் பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தில் ஒருசில ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் விலகினால் அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை என அந்த அணி வீரர் ஜோஸ் ஹேசல்வுட் தெரிவித்துள்ளார். ஒருவேளை தொடர் திட்டமிடப்பட்டபடி நடத்த இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் முழுமையான முடிவோடு இருப்பதாக கூறப்படுகிறது.