கடலுக்குள் மறைந்த குமரி நிலம்: Lemuria ஒரு கட்டுக்கதையா?
Lemuria கோட்பாடு அறிவியல் உலகில் நிராகரிக்கப்பட்டாலும், சங்க இலக்கியங்கள் சுட்டிக்காட்டும் ‘குமரி நிலம்’ உண்மையா? வரலாறு, அறிவியல், அரசியல் பின்னணியில் ஒரு ஆழமான பார்வை.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் தெற்கே, ஒரு காலத்தில் பெரும் நிலப்பரப்பு கடலுக்குள் மூழ்கியதாக தமிழ்ச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. அந்த நிலமே ‘குமரி நிலம்’ அல்லது ‘குமரிக் கண்டம்’ என அழைக்கப்படுகிறது. ஆனால் உலகளவில் அதிகம் பேசப்பட்ட பெயர் ‘Lemuria’.
இந்த Lemuria என்ற பெயர் உண்மையில் தமிழிலிருந்து தோன்றியதல்ல. 1864ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் உயிரியல் அறிஞர் பிலிப் ஸ்க்லேட்டர் என்பவர், மடகாஸ்கர் மற்றும் இந்தியாவில் மட்டும் காணப்படும் லெமூர் குரங்கு இனத்தின் பரவலை விளக்க முயன்றபோது, இவ்விரு நிலப்பரப்புகளுக்கிடையில் ஒரு பெரிய நிலம் இருந்திருக்க வேண்டும் என கருதினார். அதற்காகவே அவர் அந்த கற்பனை நிலத்திற்கு ‘Lemuria’ எனப் பெயரிட்டார்.

ஒரு காலத்தில் இந்த Lemuria கோட்பாடு ஐரோப்பிய அறிவியல் உலகில் பரபரப்பாக பேசப்பட்டது.
ஆனால் 20-ம் நூற்றாண்டில் Plate Tectonics (தட்டு நகர்வு கோட்பாடு) கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், “புதிய கண்டம் ஒன்றே முழுமையாக கடலில் மூழ்குவது சாத்தியமில்லை” என அறிவியல் உலகம் தெளிவாக அறிவித்தது. இதன் காரணமாக Lemuria என்ற கோட்பாடு அறிவியல் ரீதியாக நிராகரிக்கப்பட்டது.
ஆனால் இங்கே ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது:
“ஒரு முழு கண்டம் அல்லாமல், ஒரு பெரும் நிலப்பரப்பு கடலில் மூழ்கியிருக்க வாய்ப்பு இல்லையா?”
இந்த இடத்தில்தான் தமிழ்ச் சங்க இலக்கியங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரம் நூலில்,
“பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள”
என்று தெளிவாகக் கூறப்படுகிறது.

அதாவது, ஆறுகள், மலைகள், நாடுகள் உட்பட குமரிக் கோடு வரை இருந்த நிலப்பரப்பை கடல் கொள்ளையிட்டதாக இலக்கியம் பதிவு செய்கிறது.
மேலும், சங்க மரபுப்படி
49 நாடுகள்,
ஏழு தெங்க நாடு,
ஏழு மதுரை நாடு,
முதலாம் தமிழ்ச் சங்கம் நடைபெற்ற தென் மதுரை எனப் பெரும் நிலப்பரப்பில் தமிழ் வளர்ந்ததாகக் கூறப்படுகிறது. இவை வெறும் கற்பனைக் கதைகளாக அல்ல; தொடர்ச்சியான இலக்கியச் சான்றுகளாகவே இடம்பெறுகின்றன.
Lemuria – குமரி நிலம் குழப்பத்தின் பின்னணி
19-ம் நூற்றாண்டில் அறிவியல் உலகம் விலகிய Lemuria கோட்பாட்டை, Theosophical Society என்ற அமைப்பு கையில் எடுத்தது. அதன் நிறுவியாளர் மேடம் பிளவாட்ஸ்கி, Lemuriaவில் வாழ்ந்த மனிதர்கள் மூன்றாவது கண் கொண்டவர்கள், பல்லி முகம் உடையவர்கள், முட்டை இடுபவர்கள் என அமானுஷ்ய கதைகளை பரப்பினார்.
இந்தக் கதைகள் உலகளவில் நகைச்சுவையாக பார்க்கப்பட்டதுடன், குமரி நிலம் பற்றிய தமிழ்ச் சங்க வரலாறும் அதே ‘கட்டுக்கதை’ பட்டியலில் தள்ளப்பட்டது.
இதுவே தமிழர் வரலாற்றுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அறிவியல்-அரசியல் பாதிப்பு என வரலாற்றாளர்கள் கூறுகின்றனர்.
அறிவியல் ஆதாரம் இல்லையா?
இந்த கேள்விக்கு முழுமையான மறுப்பு இல்லை.
பூம்புகார்: கடலுக்கு அடியில் 100 அடி ஆழத்தில் கட்டிட இடிபாடுகள்
தனுஷ்கோடி: நிலப்பரப்பு சிதைவுகளின் தெளிவான சான்று
ஆராய்ச்சியாளர் கிரஹாம் ஹான்காக் உள்ளிட்டோர், பூம்புகார் அருகே கண்ட கட்டமைப்புகள் 11,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனக் குறிப்பிடுகின்றனர்.

அந்த காலகட்டத்தில் கடல் மட்டம் இன்றையதை விட சுமார் 100 மீட்டர் கீழே இருந்தது என்பதும் அறிவியல் உண்மை.
இதனால், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஒரு காலத்தில் பெரும் நிலப்பரப்பு இருந்திருக்க வாய்ப்பு அதிகம் என்ற கருத்து முழுமையாக மறுக்கப்படவில்லை.
முடிவாக Lemuria என்ற பெயரில் மேற்கத்தியர்கள் சொன்ன கதைகளில் தவறுகள் இருக்கலாம். Theosophical Society கூறிய அமானுஷ்யக் கதைகள் முழுமையான கற்பனையாக இருக்கலாம்.
ஆனால், ‘கடல்கோள்’ என தமிழ்ச் சங்க இலக்கியங்கள் பதிவு செய்த பேரழிவு, தமிழரின் வரலாற்றை கடலுக்குள் மூழ்கடித்தது என்பது மறுக்க முடியாத உண்மை.
அந்த மூழ்கிய மண்ணில்தான்
👉 ஆதித்தமிழன் நடந்திருக்கலாம்
👉 தமிழ் மொழி முதன்முதலாக ஒலித்திருக்கலாம்
👉 தமிழ் தேசிய இனத்தின் அடித்தளம் உருவாகியிருக்கலாம்
குமரி நிலம் — ஒரு கற்பனை அல்ல; மறைக்கப்பட்ட வரலாறு.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |