தாய்க்காக பொய்யான குற்றத்தை ஏற்றுக்கொண்டு சிறை சென்ற மகன்: 15 ஆண்டுகளுக்குப் பின்
தன் தாய்க்காக இந்திய வம்சாவளியினர் ஒருவர் பொய்யான குற்றத்தை ஏற்றுக்கொண்டு சிறை சென்ற நிலையில், 15 ஆண்டுகளுக்குப் பின் அவர் நிரபராதி என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தவறாக குற்றம் சாட்டப்பட்ட தபால் அலுவலகப் பணியாளர்கள்
பிரித்தானியாவில் தபால் துறையில், sub-postmaster என்னும் பொறுப்பிலிருந்த சுமார் 700க்கும் மேற்பட்ட தபால் அலுவலகப் பணியாளர்கள் மீது திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் சிறையிலடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களில் சிலர் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்வதுவரை சென்றனர்.
இது நடந்தது 2009, 2010ஆம் ஆண்டுகளில்... உண்மை என்னவென்றால், தபால் அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் Horizon என்னும் சாஃப்ட்வேரின் குளறுபடியால்தான் இந்த தபால் அலுவலக ஊழியர்கள் மீது தவறாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த உண்மை 2019ஆம் ஆண்டுதான் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை இன்னும் நடந்துகொண்டிருக்கிறது.
செய்யாத தவறுக்காக சிறை சென்ற நபர்
Horizon சாஃப்ட்வேரின் குளறுபடியால் பாதிக்கப்பட்டவர்களில் குர்பாஷ் (Gurbash Kaur Naga) என்னும் பெண்ணும் ஒருவர்.
2009ஆம் ஆண்டு, குர்பாஷ் பணியாற்றிவந்த தபால் அலுவலகத்தில் ஆடிட்டர்கள் சோதனை மேற்கொண்டபோது, 35,000 பவுண்டுகள் மாயமாகி இருந்தது தெரியவந்தது.
தன் தாயைக் காப்பாற்றுவதற்காக, தான் அந்தப் பணத்தை திருடிவிட்டதாக கூறினார் குர்பாஷின் மகனான ரவீந்தர் (Ravinder Naga).
ஆகவே, ரவீந்தருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதனால், அவர்கள் குடும்பம் செய்து வந்த தொழிலை இழந்தார்கள் நாகா குடும்பத்தினர்.
15 ஆண்டுகளுக்குப் பின்...
இந்நிலையில், 15 ஆண்டுகளுக்குப் பின் நாகா நிரபராதி என கடந்த வாரம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Horizon என்னும் சாஃப்ட்வேரின் குளறுபடியால் தவறாக குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்டவர்களில், நிரபராதி என தற்போது தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களில், ரவீந்தர் எட்டாவது நபர் ஆவார்..
தன் தாய்க்காக தான் சிறை சென்றதில் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று கூறும் ரவீந்தர், தன் தாய் சிறை சென்றிருந்தால், அவரால் அதைக் தாங்கிக்கொண்டிருந்திருக்கமுடியாது என்கிறார்.
அத்துடன், தான் விடுவிக்கப்பட்டாலும், Horizon என்னும் சாஃப்ட்வேரின் குளறுபடியால் தவறாக குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைத்தால்தான் தனக்கு நீதி கிடைத்ததாக தான் கருதுவேன் என்றும் கூறியுள்ளார் ரவீந்தர்.
ரவீந்தர் மட்டுமின்றி, அவரது தாயான குர்பாஷும் நிரபராதிகள் என நீதிமன்றம் அவர்களை வழக்கிலிருந்து விடுவித்துள்ள நிலையில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு தான் பணி செய்த தபால் அலுவலகத்துக்கு குர்பாஷ் தன் மகனுடன் சென்றிருந்தார்.
அது தொடர்பான வீடியோவும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |