தந்தை தீக்குளித்து இறந்ததாக நாடகமாடிய மகன்..பின்னர் அம்பலமான அதிர்ச்சி உண்மை
சென்னையில் கூலித்தொழிலாளி தீக்குளித்து இறந்ததாக கூறப்பட்ட நிலையில், அவரது மகனே எரித்து கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
எரிந்த நிலையில் கணவர்
சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் சத்யமூர்த்தி (50). கூலித்தொழிலாளியான இவர் கடந்த 6 மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்துள்ளார்.
நேற்று முன்தினம் இவரது மனைவி மகா வேலை முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது, சத்யமூர்த்தி எரிந்த நிலையில் இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதனையடுத்து தகவல் அறிந்த பொலிஸார் சத்யமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் சத்யமூர்த்தி உடல்நலக்குறைவு காரணமாக தீக்குளித்து இறந்திருக்கலாம் என்று கூறப்பட்டது.

ஆனால், அவரது சடலத்தின் அருகே மண்ணெண்ணெய் அல்லது பெட்ரோல் கேன் எதுவும் இல்லாததால் பொலிஸார் சந்தேகமடைந்தனர்.
அத்துடன் பிரேத பரிசோதனையின் முடிவில் சத்யமூர்த்தியின் தலையில் பலத்த காயம் இருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து, அவரது மகன் தனுஷ்கோடியை (27) பிடித்து பொலிஸார் விசாரித்துள்ளனர்.
அம்பலமான உண்மை
அப்போது மதுப்பழக்கத்திற்கு அடிமையான தனுஷ்கோடி வேலைக்கு செல்லாமல் இருந்ததை தந்தை சத்யமூர்த்தி கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தனுஷ்கோடி தந்தையை கீழே தள்ளியதில் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. பயந்துபோன தனுஷ்கோடி, வீட்டில் இருந்த போர்வை மற்றும் கால்மிதியடியை சத்யமூர்த்தி மீது போட்டு தீ வைத்து எரித்துக் கொன்றுள்ளார்.
அதன் பின்னர் தந்தை தீக்குளித்து இறந்தது போல் அவர் நாடகமாடியுள்ளார் என்பது தெரிய வந்தது. வாக்குமூலத்தை பெற்ற பொலிஸார், சத்யமூர்த்தியின் வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து, தந்தையை எரித்துக் கொன்ற தனுஷ்கோடியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        