ஜனாதிபதியாக உயர்ந்த புலம்பெயர்ந்த ஒருவரின் மகன்... ஒரு ஆடம்பர பிரியருக்கு பிரான்ஸ் நீதிமன்றம் கொடுத்துள்ள புதிய ஆபரணம்
ஹங்கேரியிலிருந்து புலம்பெயர்ந்த ஒருவரின் மகன் அவர்... பின்னாட்களில் அவர் பிரான்சின் ஜனாதிபதியாக உயர்ந்தார். மக்களிடையே புகழ்பெற்று விளங்கிய, மதுபானம் கூட அருந்தாத அந்த நபருக்கு ஆடம்பரப் பொருட்கள் என்றால் அப்படி ஒரு ஆசை.
ஜொலிக்கும் ஜனாதிபதி (The Bling-Bling President) என்றே அவரை விமர்சிக்கும் அளவுக்கு, எப்போதும் விலையுயர்ந்த கோட் சூட், ஆடம்பர கைக்கடிகாரங்கள், ரே பான் குளிர் கண்ணாடி, தங்க நகைகள் என வலம் வந்தார் அவர்.
அவர், 2007 முதல் 2012 வரை பிரான்ஸ் ஜனாதிபதியாக இருந்த நிக்கோலஸ் சார்கோஸி (66).
நேற்று பிரான்ஸ் நீதிமன்றம் ஒன்று, கூடுதலாக உடலில் அணியும் ஒரு ஆபரணத்தை சார்கோஸிக்கு வழங்கியுள்ளது. அது ஒரு எலக்ட்ரானிக் பட்டை.
அதாவது, குற்றவாளிகளைக் கண்காணிப்பதற்காக கணுக்காலில் அணியப்படும் ஒரு எலக்ட்ரானிக் சாதனம்.
மக்களுக்கு வாக்குறுதிகளை அள்ளிவீசிவிட்டு, ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நாளே, மிக ஆடம்பரமான உணவகம் ஒன்றில் இரவை செலவிட்டார் சார்கோஸி.
அப்புறம், எப்போதுமே தன் மொடல் அழகி மனைவியான கார்லா ப்ரூனி (53)உடன் ஆடம்பர உடைகள், விலையுயர்ந்த நகைகள் அணிந்து உலகம் சுற்றுவதில் நேரத்தை செலவிட்டார் அவர்.
ஒரு விமானம், 121 கார்கள், ஒரு நாள் உணவுக்கான செலவு 10,000 பவுண்டுகள் என, மக்களின் வரிப்பணத்தில் அவரது ஆடம்பரம் தொடர்ந்தது.
நாட்டு மக்களுக்கு வாக்களித்த எதையும் நிறைவேற்ற முடியாத நிலையில், சார்கோஸியின் கவனம் சர்வதேச நாடுகள் பக்கம் திரும்பியது. ஆனால், அவர் எதிர்பார்த்ததுபோல் உலக நாடுகளில் அவருக்கு புகழ் கிடைக்கவில்லை. மாறாக கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானார் அவர்.
அதற்கு காரணம் சார்க்கோஸியின் மனைவி அவரை விட ஐந்து இஞ்ச் உயரம் அதிகம். அதைச் சொல்லியே அவரை கேலி செய்தது உலகம். பாவம் அந்தப் பெண், அப்புறம் ஹீல்ஸ் போடுவதையே நிறுத்திவிட்டார்.
இப்போது கணவனுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும், போராட்டம் தொடரும், உண்மை ஒருநாள் வெளிவரும் என ட்வீட் போட்டுக்கொண்டிருக்கிறார் கார்லா.
எவ்வளவு நாள் தங்கள் பணத்தை ஜனாதிபதி சாப்பிட வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார்கள் மக்கள்? 2012ஆம் ஆண்டு, நீங்கள் ஜனாதிபதியாக இருந்தது போதும் என்று சொல்லி வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள்.
தேர்தலில் தோற்றபோது, ’இனி நீங்கள் யாரும் என்னைப்பற்றிக் கேள்விப்படவே மாட்டீர்கள்’ என்று சொல்லிவிட்டுப் போனாராம் சார்கோஸி.
ஆனால், அவர் வீட்டுக்குப் போனாலும் அடுத்த அரசு அவரை நிம்மதியாக இருக்கவிடவில்லை.
நீதிபதி ஒருவருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது, ஊழல், அதிகார துஷ்பிரயோகம் என வரிசையாக வழக்குகள் தொடரப்பட, தினமும் சார்கோஸியைக் குறித்த செய்திகளை மக்கள் கேள்விப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
அதில் சமீபத்திய செய்தி, முன்னாள் ஜனாதிபதி சார்கோஸி ஊழல் குற்றத்திற்காக சிறைக்கு செல்கிறார் என்பது.
ஆம், நேற்று சார்கோஸிக்கு ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்துக்காக மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் ஓராண்டு தண்டனையை அவர் வீட்டுச்சிறையில் இருந்தே அனுபவிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதற்காகத்தான் அவரது கணுக்காலில் ஒரு எலக்ட்ரானிக் பட்டை அணிவிக்கப்பட்டுள்ளது.
மீதி இரண்டாண்டுகள் தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால், மேலும் சில வழக்குகளையும் சார்கோஸி எதிர்கொள்ளவேண்டியுள்ளதால் நாளை என்ன நடக்கும் என்பது இப்போதைக்கு யாருக்கும் தெரியாது.