சைப்ரஸ் ஹோட்டல் விபத்து: மாடியில் இருந்து விழுந்த 2 வயது சிறுவன்: தந்தை மீது வழக்குப்பதிவு
சைப்ரஸ் நாட்டில் பாஃபோஸ் நகரில் உள்ள விடுதியில் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவத்தில் பிரித்தானிய தந்தை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாடியில் இருந்து கீழே விழுந்த சிறுவன்
ஞாயிற்றுக்கிழமை சைப்ரஸ் நாட்டின் பாஃபோஸ் நகருக்கு அருகிலுள்ள கிங் எவெல்தன் பீச் ஹோட்டல் அண்ட் ரெசார்ட்டில் தந்தையும் அவரது 2 வயது மகனும் நான்காவது மாடியில் லிப்டுக்காக காத்திருந்துள்ளனர்.
அப்போது மகனை இடுப்பில் வைத்து இருபுறமும் ஆட்டி விளையாடிக் கொண்டிருந்த நிலையில், மகன் திடீரென பிடியில் இருந்து நழுவி அருகில் இருந்த ஜன்னல் வழியாக கீழே விழுந்துள்ளான்.

சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
தந்தை மீது வழக்குப்பதிவு
இந்நிலையில், இந்த விவகாரத்தில் தந்தையின் பொறுப்பற்ற செயல் மற்றும் அலட்சியம் சிறுவனின் உயிருக்கு ஆபத்து விளைவித்ததாக கூறி அவர் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யுமாறு அட்டர்னி ஜெனரல் ஜார்ஜ் சவிடிஸ் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கில் தந்தை குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 4 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
விசாரணையின் போது, தந்தையின் ரத்தத்தில் மிக குறைவான அளவு மது அருந்தியதற்கான தடயங்கள் இருந்தது தெரியவந்துள்ளது.
குழந்தையின் பெற்றோர் 20,000 யூரோக்களை செலுத்தி ஜாமீன் பெற்றுள்ள போதிலும், அவர்கள் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |