சிக்ஸர்மழை பொழிந்த சோஃபி! 57 பந்தில் 87 ரன்..இங்கிலாந்து தோல்வி
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் நியூஸிலாந்து அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ருத்ரதாண்டவம் சோஃபி டிவைன்
நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி கான்டர்பரியில் நடைபெற்றது.
முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 11 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அப்போது அதிரடியில் இறங்கிய சோஃபி டிவைன் (Sophie Devine) அரைசதம் விளாசினார்.
அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த மேடி கிரீனும் அரைசதம் அடித்தார். இதன்மூலம் நியூஸிலாந்து அணி 170 ஓட்டங்கள் குவித்தது. சோஃபி டிவைன் 57 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 87 ஓட்டங்கள் விளாசினார்.
மேடி கிரீன் (Maddy Green) 48 பந்துகளில் 56 ஓட்டங்கள் எடுத்தார். லின்சே ஸ்மித் 3 விக்கெட்டுகளும், லாரன் பெல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
நியூஸிலாந்து வெற்றி
பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் சோஃபியா 18 பந்துகளில் 26 ஓட்டங்களும், அலிஸ் கேப்ஸி 19 பந்துகளில் 22 ஓட்டங்களும் விளாசினர்.

அடுத்து வந்த மையா பௌஷியர் 38 ஓட்டங்களும், ஹெதர் நைட் 25 ஓட்டங்களும் எடுக்க இங்கிலாந்து அணி வெற்றியை நோக்கி பயணித்தது.
ஆனால், நியூஸிலாந்தின் ப்ரீ இல்லிங் மற்றும் லியா தஹுஹு கடைசி 2ஓவர்களை துல்லியமாக வீச, இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ஓட்டங்களே எடுத்தது.
இதன்மூலம் நியூஸிலாந்து அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று, தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி நாளை ஹோவில் நடைபெற உள்ளது.


| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |