365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண்
பிரித்தானிய அமைப்பில் முதல்முறையாக தமிழ்நாட்டு பெண் இடம்பிடித்துள்ளார்.
சௌமியா சுவாமிநாதன்
1660 ஆம் ஆண்டு பிரித்தானிய ராயல் சொசைட்டி நிறுவப்பட்டது. இது பிரித்தானிய அரசுக்கான அறிவியல் ஆலோசகராகச் செயற்படுகிறது.
ராயல் சொசைட்டியின் உறுப்பினராக (FRS) தேர்ந்தெடுக்கப்படுவது, அறிவியலில் வழங்கப்படும் மிக உயர்ந்த உலகளாவிய கௌரவங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

தற்போது தமிழ்நாட்டை சேர்ந்த மருத்துவர் சௌமியா சுவாமிநாதன்(Soumya Swaminathan), ராயல் சொசைட்டியின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சௌமியா சுவாமிநாதன், இந்திய பசுமை புரட்சியின் தந்தை என அழைக்கப்படும் எம்.எஸ்.சுவாமிநாதனின் மகள் ஆவார்.

சௌமியா சுவாமிநாதன் உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி, இந்திய அரசின் சுகாதார ஆராய்ச்சி செயலாளர், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தலைமை இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
ராயல் சொசைட்டியின் 365 ஆண்டு கால வரலாற்றில், உறுப்பினராகும் முதல் தமிழ்நாட்டு பெண் விஞ்ஞானி என்ற பெருமையை சௌமியா சுவாமிநாதன் பெற்றுள்ளார்.
இவரது தந்தை எம்.எஸ்.சுவாமிநாதனும் ராயல் சொசைட்டியின் உறுப்பினராக இருந்துள்ளார்.
மேலும், பேராசிரியர் ககன்தீப் காங்கிற்குப் பிறகு இந்த கௌரவத்தைப் பெறும் இரண்டாவது இந்தியப் பெண் விஞ்ஞானி என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

இதே போல், தமிழ் குடும்பத்தை சேர்ந்த அமெரிக்காவில் வசித்து வரும் லலிதா ராமகிருஷ்ணன் இந்த அமைப்பில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் நோபல் பரிசு விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனின் சகோதரி ஆவார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |