நடிகை சௌந்தர்யா மரணத்தில் மோகன்பாபுவிற்கு தொடர்பா? கணவர் ரகு விளக்கம்
சௌந்தர்யா மரணத்தில் மோகன்பாபுவிற்கு தொடர்பு இருப்பதாக எழுந்த சர்ச்சைக்கு அவரின் கணவர் ரகு விளக்கமளித்துள்ளார்.
நடிகை சௌந்தர்யா
தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் கன்னடம் என பல்வேறு மொழிப்படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வந்தவர் சௌந்தர்யா.
தமிழில் படையப்பா, அருணாச்சலம், சொக்கத்தங்கம் போன்ற படங்களில் நடித்துள்ளதால் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார்.
இவர் கடந்த 2004 ஏப்ரல் 17 ஆம் தேதி, தேர்தல் பிரச்சாரத்திற்காக, கரீம்நகரில் இருந்து பெங்களூருவுக்கு தனது சகோதரர் அமர்நாத்துடன் தனி விமானத்தில் சௌந்தர்யா சென்ற போது, விமானம் விபத்துக்குள்ளாகி இருவரும் உயிரிழந்தனர்.
இறப்பில் சந்தேகம்
இந்நிலையில், தெலுங்கானா கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சிட்டிமல்லு, சௌந்தர்யா மரணத்தின் பின்னணியில் சதித்திட்டம் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரில், சௌந்தர்யாவிற்கு சொந்தமான 6 ஏக்கர் நிலம் ஷம்ஷாபாத்தின் ஜல்லேபள்ளியில் இருந்தது. இந்த நிலத்தை நடிகர் மோகன்பாபு கேட்ட போது, அதை சகோதரர் அமர்நாத் கொடுக்க மறுத்து விட்டார்.
அவர்களின் மரணத்திற்கு பின்னர், மோகன்பாபு அந்த நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளார்.
அந்த நிலத்தை மீட்டு ஆதரவற்றோர், ராணுவத்தினர் ஆகியோரின் நலனுக்கு வழங்க வேண்டும். அவர்களின் மரணத்தில் உள்ள சதியை விசாரிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
கணவர் விளக்கம்
இந்நிலையில், சௌந்தர்யாவின் மரணத்தில் நடிகர் மோகன்பாபுவிற்கு எந்த சம்மந்தமும் இல்லை. 25 வருடங்களாக நடிகர் மோகன்பாபுவிற்கும், எங்களுக்குமிடையே நல்ல உறவு உள்ளது.
அவர் சௌந்தர்யாவிற்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை. அவருடன் எங்களுக்கு எந்த நில பிரச்சனையும் இல்லை. இது போன்ற தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்" என நடிகை சௌந்தர்யாவின் கணவர் ரகு விளக்கமளித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |