அவுஸ்திரேலியாவை அடித்து நொறுக்கி அபார வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா
13-வது உலகக் கிண்ணம் கிரிக்கெட் போட்டி தொடரில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி 134 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
7 விக்கெட் இழப்பிற்கு 311 ஓட்டங்கள்
13-வது உலகக் கிண்ணம் கிரிக்கெட் போட்டி தொடரின் 10-வது லீக் ஆட்டத்தில் அவுஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.
இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக் , பவுமா களமிறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடி ஓட்டங்களை சேர்த்தனர். 35 ஓட்டங்கள் எடுத்திருந்த பவுமா, மேக்ஸ்வெல் பந்தில் அவுட் ஆனார்.
அடுத்து வந்த ராஸ்ஸி வான் டெர் டுசென் 26 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடி வந்த டி காக் சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து மிரட்டிய டி காக் 109 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து மார்க்ரம் - கிளாசன் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்க்ரம் அரை சதம் விளாசினார். அவர் 56 ஓட்டங்கள் எடுத்திருந்த போது கம்மின்ஸ் பந்து வீச்சிலும், கிளாசன் 29 ஓட்டங்களில் ஹசில்வுட் பந்து வீச்சிலும் ஆட்டமிழந்தனர்.
ரசிகர்களுக்கு ஏமாற்றம்
இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 311 ஓட்டங்கள் எடுத்தது. அவுஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக ஸ்டார்க், மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து 312 ஓட்டங்கள் இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான மிட்செல் மார்ஷ் மற்றும் டேவிட் வார்னர் முறையே 7 மற்றும் 13 ஓட்டங்களில் ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தனர்.
அடுத்து வந்த ஸ்டீவன் ஸ்மித் 19 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, இவருடன் விளையாடி வந்த லபுஷேன் நிதானமாக ஆடி 46 ஓட்டங்களை சேர்த்தார். ஆனால் இவரை தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க அவுஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இறுதியில் அவுஸ்திரேலிய அணி 40.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 177 ஓட்டங்களை மட்டுமே குவித்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 134 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆபார வெற்றியை பதிவு செய்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |