9 விக்கெட்டுகள்..84 ஓட்டங்கள்! வங்கதேசத்தை புரட்டியெடுத்த தென் ஆப்பிரிக்க வீரர்
போர்ட் எலிசபெத் டெஸ்டில் வங்கதேச அணியை 332 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தில் தென் ஆப்பிரிக்க அணி இமாலய வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நடந்தது. முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா 453 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மகாராஜ் 84 ஓட்டங்களும், எல்கர் 70 ஓட்டங்களும், பவுமா 67 ஓட்டங்களும் எடுத்தனர். வங்கதேச தரப்பில் டைஜுல் இஸ்லாம் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் ஆடிய வங்கதேசம் 217 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரஹீம் 51 ஓட்டங்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஹர்மர்,முல்டர் தலா 3 விக்கெட்டுகளும், மகாராஜ், ஒலிவர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட் இழப்புக்கு 176 ஓட்டங்கள் எடுத்து டிக்ளெர் செய்தது. இதன்மூலம் வங்கதேச அணிக்கு 413 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இமாலய இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி கேசவ் மகாராஜின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 80 ஓட்டங்களுக்கு சுருண்டது. மகாராஜ் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி மிரட்டினார்.
இதன்மூலம் 332 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. மொத்தம் 9 விக்கெட்டுகள் மற்றும் 84 ஓட்டங்கள் எடுத்த கேசவ் மகாராஜ் வங்கதேச அணிக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார். அவர் 42 டெஸ்ட்களில் 150 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.