தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: நியூசிலாந்து இன்னிங்ஸ் வெற்றி!
தென் ஆப்பிரிக்க அணியுடனான முதல் டெஸ்டில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 276 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.
ஹேக்லி ஓவல் மைதானத்தில் கடந்த 17-ஆம் திகதி தொடங்கி நடந்து வந்த இப்போட்டியில், முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 49.2 ஓவரில் 95 ஓட்டங்களுக்கு சுருண்டது. நியூசிலாந்து அணியின் வீரர் மாட் ஹென்றி 7 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
நியூசி முதல் இன்னிங்சில் 482 ஓட்டங்கள் குவித்து ஆல் அவுட்டானது. அந்த அணியின் ஹென்றி நிகோல்ஸ் 105 ஓட்டங்களும், டாம் பிளண்டெல் 96 ஓட்டங்களும், மாட் ஹென்றி 58* ஓட்டங்கள் விளாசினர். தென் ஆப்ரிக்க தரப்பில் ஆலிவர் 3 விக்கெட் எடுத்தார்.
இதையடுத்து 387 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய தென்னாப்பிரிக்கா, 2-ஆம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 34 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
பவுமா 22, டசன் 9 ஓட்டங்களுடன் நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். நியூசிலாந்து வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
அந்த அணி 41.4 ஓவரில் 111 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டையும் பறிகொடுக்க, நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 276 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.
அதிகபட்சமாக பவுமா 41 ஓட்டங்கள், கைல் வெர்ரைன் 30 ஓட்டங்கள் எடுத்தனர். நியூசி தரப்பில் டிம் சவுத்தீ 5, மேட் ஹென்றி, வேக்னர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். ஆல் ரவுண்டராக அசத்திய மாட் ஹென்றி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
நியூசிலாந்து 1-0 என முன்னிலை வகிக்க, 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் இதே மைதானத்தில் வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி தொடங்குகிறது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 46 டெஸ்டில் விளையாடியுள்ள நியூசிலாந்துக்கு இது 5-வது வெற்றியாகும்.
ஒருமுறை கூட தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்ற சோக வரலாற்றுக்கு, இம்முறை நியூசிலாந்து முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.