இந்திய அணியை பந்தாடிய டோனி டி ஜோர்ஜி: 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி
இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
தடுமாறிய இந்திய அணி
இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து தொடக்க வீரராக இந்திய அணியில் களமிறங்கிய ருதுராஜ் 4 ஓட்டங்களில் வெளியேறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். பின்னர் வந்த திலக் வர்மாவும் 10 ஓட்டங்களில் வெளியேறி இந்திய ரசிகர்களை திடுக்கிட செய்தார்.
ஆனால் பின்னர் ஜோடி சேர்ந்த சாய் சுதர்சன் மற்றும் கேப்டன் கே.எல் ராகுல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
தமிழக வீரர் சாய் சுதர்சன் 83 பந்துகளில் 62 ஓட்டங்களை குவித்தார், கேப்டன் கே.எல் ராகுல் 64 பந்துகளில் 56 ஓட்டங்களை குவித்து அசத்தினார்.
இருப்பினும் பின்னர் வந்த வீரர்கள் யாரும் ஜொலிக்காத நிலையில், 46.2 ஓவர்கள் முடிவிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி 211 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.
மிரட்டிய தென் ஆப்பிரிக்கா
இதையடுத்து இரண்டாவது பேட்டிங்கில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் தொடக்க வீரர்கள் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ரீசா ஹென்ட்ரிக்ஸ் 81 பந்துகளில் 52 ஓட்டங்களையும், டோனி டி ஜோர்ஜி இறுதி வரை விக்கெட்டை இழக்காமல் 122 பந்துகளில் 119 ஓட்டங்களை குவித்து அசத்தினர்.
ரஸ்ஸி வான் டெர் டஸ்ஸென் தன்னுடைய பங்கிற்கு 36 ஓட்டங்களை குவித்து அசத்தினார்.
இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணி 42.3 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 215 ஓட்டங்களை குவித்து வெற்றி இலக்கை அடைந்தது.
அத்துடன் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2வது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |