தென் ஆப்பிரிக்காவை நிலைகுலைய செய்த ஹசரங்கா! ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியும்... நூலிழையில் பறிபோன வெற்றி
தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான போட்டியில், இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வஹிந்து ஹசரங்கா ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியும், இலங்கை அணி தோல்வியை சந்தித்தது.
உலகக்கோப்பை டி20 தொடரின் சூப்பர் 12 போட்டியின் இன்றைய முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் மோதின.
இதில் முதலில் ஆடிய இலங்கை அணிக்கு துவக்க வீரர்களாக பதும் நிஷங்கா மற்றும் குசல் பெரேரா களமிறங்கினர். இதில் குசல் பெரேரா 7 ஓட்டங்கள் எடுத்த நிலையில் நார்ட்டஜி பந்து வீச்சல் ஆட்டமிழந்தார்.
அதன் பின் வந்த, சரித் அசலங்கா 14 பந்தில் 21 ஓட்டங்கள் எடுத்த நிலையில், ரன் அவுட் ஆக, இவரைத் தொடர்ந்து இலங்கை வீரர்கள் பனுக ராஜபக்ஷ டக் அவுட், அவுஷ்கா பெர்ணாண்டோ (3), வஹிந்து ஹசரங்கா (4), தசுன் சனகா(11) பந்துகளில் வெளியேற, மறுபுறம் மற்றொரு துவக்க வீரரான பதும் நிஷங்கா தென் ஆப்பிரிக்கா அணியின் பந்து வீச்சை வெளுத்துவாங்கினார்.
இதனால் அரைசதம் அடித்த அவர் 58 பந்தில் 72 ஓட்டங்கள் எடுத்த நிலையில், அவுட் ஆக, இறுதியாக இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 142 ஓட்டங்கள் எடுத்தது.
தென் ஆப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக சுழற்பந்து வீச்சாளர் டாபிரியாஸ் சம்ஸி, டேவைன் பிரிட்ரியஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து 143 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு துவக்க வீரர்களான குயிண்டன் டி காக்(12), ரீஷீ ஹண்ட்ரிக்ஸ்(11), மூன்றாவது வீரராக வந்த ரசி வண்டர் ஹுசைன் 16 ஓட்டங்களில் வெளியேற, தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் ஆன டெம்பா பவுமா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இவருடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த எய்டன் மார்க்கம் 20 பந்தில் 19 ஓட்டங்கள் எடுத்த போது, இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளரான வஹிந்து ஹசரங்கா பந்து வீச்சில்(ஆட்டத்தின் 14.6 ஓவரில்) ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து இலங்கை அணிக்கு தொல்லை கொடுத்து வந்த டெம்பா பவுமா 46 பந்தில் 46 ஓட்டங்கள் எடுத்த நிலையில் , வஹிந்து ஹசரங்கா வீசிய ஆட்டத்தின் 17.1 பந்தில் ஆட்டமிழக்க, இவரைத் தொடர்ந்து டிவைன் பிரிட்ரியர்ஸ் டக் அவுட் ஆக, வஹிந்து ஹசரங்கா ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இருப்பினும் கடைசி ஓவரில் அணியின் வெற்றிக்கு 15 ஓட்டங்கள் தேவை என்ற போது, தென் ஆப்பிரிக்கா அணியின் அதிரடி ஆட்டக்கராரான டேவிட் மில்லர் அபாரமாக விளையாடி பவுண்டரி, சிக்ஸர் பறக்கவிட்டு, 19.5-ஓவரிலே 145 ஓட்டங்கள் எடுத்து அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.
டேவிட் மில்லியர் கடைசி வரை அவுட்டாகமல் 13 பந்தில் 23 ஓட்டங்கள் குவித்து தென் ஆப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார்.