40 ஓவரில் 312 ஓட்டங்கள் விளாசிய மகளிர்படை! நொறுங்கிய பாகிஸ்தான் வெளியேற்றம்
மகளிர் உலகக்கிண்ணத் தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியது.
ருத்ர தாண்டவம்
கொழும்பில் நேற்று நடந்த மகளிர் உலகக்கிண்ணத் தொடர் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 15 ஓவர்கள் வரை விளையாடியபோது மழை குறுக்கிட்டது. இதனால் 40 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றியமைக்கப்பட்டது.
சுனே லூஸ் (Sune Luus) 59 பந்துகளில் 61 ஓட்டங்கள் விளாசினார். அணித்தலைவர் லௌரா வோல்வார்ட் (Laura Wolvaardt) 90 (82) ஓட்டங்கள் குவித்து வெளியேற, மரிசன்னே கப் மற்றும் நடீனே டி கிளெர்க் கூட்டணி ருத்ர தாண்டவம் ஆடியது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 40 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 312 ஓட்டங்கள் குவித்தது.
நடீனே டி கிளெர்க் 16 பந்துகளில் 4 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 41 ஓட்டங்கள் விளாசினார்.
மரிசன்னே கப் (Marizanne Kapp) 43 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 68 ஓட்டங்கள் விளாசினார். சாடியா இக்பால், நஸ்ரா சந்து தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பாகிஸ்தான் வெளியேற்றம்
பின்னர் பாகிஸ்தான் களமிறங்கியபோது அடிக்கடி மழை குறுக்கிட்டது. இறுதியாக 20 ஓவர்களில் 234 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 83 ஓட்டங்கள் மட்டுமே எடுத்ததால், தென் ஆப்பிரிக்க அணி 150 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் அணி 6 போட்டிகளில் 4 தோல்விகளை தழுவியத்துடன், 2 புள்ளிகள் மட்டுமே பெற்றதால் தொடரை விட்டு வெளியேறியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |