சுவிட்சர்லாந்துக்குள் நுழைந்த தென்னாப்பிரிக்க கொரோனா...
தென்னாப்பிரிக்க வகை கொரோனா வைரஸ் சுவிட்சர்லாந்துக்குள் நுழைந்துள்ள விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
இத்தாலி மொழி பேசும் சுவிஸ் பகுதி அதிகாரிகள் தென்னாப்பிரிக்க வகை கொரோனா வைரஸ் பாதித்த முதல் நபரை கண்டுபிடித்துள்ளார்கள்.
தென்னாப்பிரிக்காவிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு வந்த அந்த நபருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக Ticino மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகின் பல பகுதிகளில் புதிய வகை கொரோனா வைரஸ் ஒன்று பரவி வருகிறது. அவற்றில் ஒன்று பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ், மற்றொன்று தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ்.
முந்தைய வைரஸைவிட, இந்த திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் அதிக தீவிரம் வாய்ந்தது என கருதப்படுகிறது.
அத்துடன், ஏற்கனவே கொரோனா வைரஸுக்கெதிராக கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள், இந்த வைரஸுக்கு எதிராக செயல்படுமா என்பதும் இன்னமும் தெரியவரவில்லை.
சுவிட்சர்லாந்தைப் பொறுத்தவரையில், குறைந்தது 13 பேர் இந்த திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
அவர்களில் பத்து பேருக்கு பிரித்தானிய வகை வைரஸும், மூன்று பேருக்கு தென்னாப்பிரிக்க வகை வைரஸும் தொற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.