எங்கள் நாட்டில் ஐபிஎல் நடத்த வாங்க! இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ள பிரபல நாடு
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரை தங்கள் நாட்டில் நடத்துவதற்கு தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் சங்கம் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2008-ஆம் ஆண்டு இந்தியாவில் துவங்கப்பட்ட உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர், இந்த ஆண்டு 10 அணிகளுடன் நடைபெறவுள்ளது. இதற்கான ஐபிஎல் ஏலம், வரும் பிப்ரவரி 12 மற்றும் 13-ஆம் திகதிகளில் பெங்களூருவில் நடைபெறவுள்ளது.
இந்தியாவில், தற்போது குறிப்பிட்ட சில நகரங்களில் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளதால், கடந்த ஆண்டு போன்று துபாயில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், தங்களுடைய நாட்டில் ஐபிஎல் 2022 போட்டியை நடத்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சங்கம் பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தங்களுடைய நாட்டில் உள்ள சாதகமான அம்சங்கள் குறித்து தென் ஆப்பிரிக்கா பிசிசிஐ-க்கு தெரிவித்துள்ளதாம். அதில், ஐக்கிய அரபு அமீரகத்தை விடவும் தென்னாப்பிரிக்காவில் ஹோட்டல் செலவுகள் குறைவு.
தென்னாப்பிரிக்காவில் ஜொஹன்னஸ்பர்க்கைச் சுற்றி 4 மைதானங்கள் உள்ளன. இந்த 4 மைதானங்களிலும் ஏராளமான ஆட்டங்களை நடத்த முடியும். 4 மைதானங்களிலும் பகலிரவு ஆட்டங்களை நடத்தக்கூடிய வசதிகள் உள்ளன. வாகனத்தில் செல்லக்கூடிய குறைந்த தூரத்தில் தான் ஒவ்வொன்றும் உள்ளன. கேப்டவுனிலும் அதன் அருகில் உள்ள பார்ல் மைதானத்திலும் போட்டியை நடத்தலாம்.
2009-ல் தென்னாப்பிரிக்காவில் ஏற்கெனவே ஐபிஎல் போட்டி நடைபெற்றுள்ளது போன்றவையை குறிப்பிட்டுள்ளது. இந்த அம்சங்களைக் குறிப்பிட்டு ஐபிஎல் 2022 போட்டி தங்களுடைய நாட்டில் நடைபெற வேண்டும் என தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் சங்கம் பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.