தென் மாவட்ட பேருந்துகள் நாளை முதல் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படாது.., கிளாம்பாக்கம் தான்: அமைச்சர் திட்டவட்டம்
தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து பேருந்துகளும் நாளை முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயங்கும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படாது
சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து செல்லுமா, கோயம்பேட்டில் இருந்து செல்லுமா என்ற குழப்பம் சில நாட்களாக இருந்து வருகிறது.
இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், "கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து முதற்கட்டமாக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேலும், ஜனவரி 24 -ம் திகதி முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அனைத்து போக்குவரத்து கழகங்களைச் சேர்ந்த செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் 710 பேருந்துகளும் நாளை முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயங்கும். கோயம்பேடு முனையத்தில் இருந்து இயக்கப்படாது" என்றார்.
கோயம்பேட்டில் இருந்து எந்த பேருந்துகள் இயக்கப்படும்
மேலும் பேசிய அமைச்சர், "ஈசிஆர் வழியாகவும், பூந்தமல்லி வழியாக வேலூர், ஓசூர், ஆம்பூர், திருப்பத்தூருக்குச் செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.
மேலும், விழுப்புரம் போக்குவரத்து கோட்ட பேருந்துகள் மட்டும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும்போது தாம்பரம் வரை இயக்கப்படும். பின்னர் அங்கிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |