அனுமதியின்றி பெண்ணின் படுக்கையறைக்குள்... வில் அம்புடன் மிரட்டல் விடுத்த நபர் குறித்த புதிய தகவல்கள்
லண்டனில், வில், அம்பு முதலான ஆயுதங்களுடன், வீடு ஒன்றில் வசிப்பவர்களை மிரட்டிய நபர் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்நிலையில், அவர் ஒரு பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்துவந்தது முதலான புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
வில் அம்புடன் மிரட்டல் விடுத்த நபர்
நேற்று முன்தினம், செவ்வாய்க்கிழமை, தென்கிழக்கு லண்டனில் அமைந்துள்ள வீடு ஒன்றில் வசிப்பவர்களை, வில், அம்பு முதலான ஆயுதங்களைக் காட்டி மிரட்டியுள்ளார் ஒருவர். அந்த பகுதியில் நின்ற பொலிசார் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்றுள்ளனர்.
ஆனால், அவர் வில், அம்பு, பட்டாக்கத்தி, வாள் போன்ற ஆயுதங்கள் வைத்திருந்ததால், தங்களுக்கு ஆபத்து நேரிடலாம் என உணர்ந்த அவர்கள், மேலதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதைத் தொடர்ந்து, ஆயுதம் ஏந்திய பொலிசார் அங்கு வந்துள்ளனர். உடனே அந்த நபர் அந்த வீட்டுக்குள் சென்று மறைந்துகொண்டுள்ளார்.
(Image: Handout)
உடனே வீட்டுக்குள் நுழைந்த பொலிசாரில் ஒருவர், அந்த நபரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளார்.
மிரட்டல் விடுத்த நபர் குறித்த புதிய தகவல்கள்
சுட்டுக்கொல்லப்பட்டவரின் பெயர், ப்ரைஸ் ஹாட்க்சன் (Bryce Hodgson, 30) என தெரியவந்துள்ளது. இந்த ப்ரைஸ், ஏற்கனவே, பெண் ஒருவரின் படுக்கையறைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். வீட்டுக் கதவைத் திறக்குமாறு வற்புறுத்தும் குறுஞ்செய்திகள் அனுப்பி அவரை மிரட்டியதுடன், தனது மோசமான ஆசைகளையும் குறுஞ்செய்திகள் மூலம் அந்தப் பெண்ணுக்குத் தெரிவித்துள்ளார்.
(Image: David Nathan/UKNIP)
கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை அவரது தொல்லைகள் தொடர்ந்த நிலையில், அந்தப் பெண் பொலிசில் புகாரளிக்க, அந்த தெருவுக்குள்ளேயே நுழையக்கூடாது என்று அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இரவு நேரங்களில் வெளியே வராதபடிக்கும் அவருக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்திருக்கிறது. அது தொடர்பான வழக்கில், ப்ரைஸுக்கு இந்த ஆண்டு ஜூலை மாதம் தீர்ப்பு வழங்கப்பட இருந்தது.
(Image: David Nathan/UKNIP)
இப்படிப்பட்ட சூழலில்தான், கட்டுப்பாடுகளை மீறி, மீண்டும் அந்த வீட்டுக்கு வந்து மிரட்டல் விடுக்க, பொலிசார் அவரை சுட்டுக்கொன்றுள்ளனர் என தற்போது தெரியவந்துள்ளது.
(Image: David Nathan/UKNIP)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |