தென்கிழக்கு ஆசியாவை மூழ்கடித்த பெருவெள்ளம்... 180 கடந்த இறப்பு எண்ணிக்கை
தென்கிழக்கு ஆசியாவின் பெரும் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை வெளியான தரவுகளின் அடிப்படையில் 183 என உயர்ந்துள்ளது.
அடைமழையால்
வெள்ளம் வடியத் தொடங்கிய நிலையில், சிக்கித் தவிக்கும் குடிமக்களை மீட்பதற்கும், மின்சாரம் மற்றும் தகவல் தொடர்புகளை மீட்டெடுப்பதற்கும், மீட்பு முயற்சிகளை ஒருங்கிணைப்பதற்கும் பிராந்திய அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்தோனேசியா, மலேசியா மற்றும் தாய்லாந்தின் பெரும்பகுதிகள் ஒரு வாரமாக சூறாவளியால் தூண்டப்பட்ட அடைமழையால் பாதிக்கப்பட்டுள்ளன, மலாக்கா ஜலசந்தியில் ஒரு அரிய வெப்பமண்டல புயல் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், தெற்காசிய தீவு நாடான இலங்கையில் சூறாவளியால் மேலும் 46 பேர் மரணமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்தோனேசியாவின் சுமத்ராவில், வெள்ளிக்கிழமை பிற்பகல் வரை 94 பேர் மரணமடைந்ததாக மூன்று மாகாண அதிகாரிகளின் தரவுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
சுமத்ராவின் படாங் பரியாமன் பகுதியில், மொத்தம் 22 பேர் மரணமடைந்தனர், அங்குள்ள மக்கள் குறைந்தது ஒரு மீற்றர் உயரத்திற்கு நீர் மட்டத்தை சமாளிக்க வேண்டியிருந்தது,

மேலும் வெள்ளிக்கிழமை தேடுதல் மற்றும் மீட்புப் பணியாளர்களால் இன்னும் அவர்களை அடைய முடியவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.
புயல் சென்யார்
இதனிடையே, இந்தோனேசியாவின் தேசிய பேரிடர் தணிப்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அப்துல் முஹாரி தெரிவிக்கையில், தீவின் சில பகுதிகளில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், நிலச்சரிவு குப்பைகளால் தடைபட்ட சாலைகளை சுத்தம் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தாய்லாந்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு மாகாணங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 87 பேர் மரணமடைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
மொத்தம் 3.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. மலேசியாவில், இரண்டு பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது, வெப்பமண்டல புயல் சென்யார் நள்ளிரவில் கரையைக் கடந்தது, பின்னர் அது பலவீனமடைந்துள்ளது.
வியாழக்கிழமை 34,000க்கும் அதிகமானோர் முகாம்களில் தங்கியிருந்தனர், தற்போது 30,000 பேர் தங்குமிடங்களில் உள்ளனர்.

இதனிடையே, தாய்லாந்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 25க்கும் மேற்பட்ட ஹொட்டல்களில் சிக்கித் தவித்த 1,459 மலேசியர்களை வெளியேற்றிவிட்டதாக மலேசிய வெளிவிவகார அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
மேலும், வெள்ளப் பகுதிகளில் சிக்கியுள்ள மீதமுள்ள 300 பேரை மீட்பதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |