நாட்டை உலுக்கிய Southport தாக்குதல்தாரியின் புகைப்படம் உள்ளிட்ட தகவல்கள் வெளியானது
பிரித்தானியாவின் Southport பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சிறுவர்களுக்கான கோடைகால முகாமில் புகுந்து தாக்குதல் நடத்திய நபரின் புகைப்படம் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
புகைப்படம் வெளியிடப்பட்டது
குறித்த 17 வயது நபரின் பெயர் Axel Muganwa Rudakubana எனவும், அவரது 18 வது பிறந்த நாளுக்கு சில தினங்களே எஞ்சியுள்ள நிலையில், நீதிமன்றம் கட்டுப்பாடுகளை நீக்கியதுடன், தற்போது புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.
லிவர்பூல் கிரவுன் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்ட 17 வயது ருடகுபனா மீது மூன்று கொலை வழக்குகள் பதியப்பட்டுள்ளது. அத்துடன் 10 கொலை முயற்சி வழக்குகளும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
மேலும், ருடகுபனா ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறால் பாதிக்கப்பட்டவர் என்பதால், வீட்டில் இருந்து வெளியே செல்ல தயக்கம் கொண்டவர் தமது கட்சிக்காரர் என அவர் சார்பு சட்டத்தரணிகள் வாதிட்டுள்ளனர்.
இதனிடையே, ருடகுபனா தொடர்பில் பல்வேறு வதந்திகள் பரவுவதுடன், தவறான தகவல்களால் நாடு முழுவதும் தீவிர வலதுசாரிகள் வன்முறை சம்பவங்களை முன்னெடுத்து வருவதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
அக்டோபர் 25 வரையில் நீதிமன்ற காவலில் வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ருவாண்டா பெற்றோருக்கு கார்டிஃப் நகரில் பிறந்தார் ருடகுபனா. இவருக்கு ஒரு சகோதரரும் உள்ளார். 2013ல் தான் ருடகுபனா லங்காஷயரில் உள்ள ஒரு கிராமத்தில் குடிபெயர்ந்துள்ளார்.
தீவிர வலதுசாரிகளால் கலவரம்
Southport பகுதியில் இருந்து சில மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது இவர் வசித்துவந்த கிராமம். ஜூலை 29ம் திகதி யோகா மற்றும் நடன வகுப்புகளுக்கான கோடைகால முகாம் ஒன்றில் நுழைந்து சமையலறை கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளான்.
இதில், சிறுமி ஒருவர் சம்பவயிடத்திலேயே மரணமடைய, காயங்களுடன் தப்பியவர்களில், மேலும் இரு சிறுமிகள் மரணமடைந்தனர். காயங்களுடன் தப்பியவர்களில் இரு சிறுமிகள் தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும், சிறார்கள் முகாமில் நுழைந்து முன்னெடுக்கப்பட்ட தாக்குதலானது, நாடு முழுவதும் தீவிர வலதுசாரிகளால் ஆர்ப்பாட்டம் மற்றும் கலவரங்களை தூண்டியது. பொலிஸ் வாகனங்கள் கொளுத்தப்பட்டன.
டசின் கணக்கான பொலிசார் காயமடைந்துள்ளனர். லண்டனில், வைட்ஹால் பகுதியில் கலவரம் வெடித்ததை அடுத்து 100 பேர் கைது செய்யப்பட்டனர். Southport பகுதியில் ஒரு மசூதிக்கு வெளியே கலகக்காரர்கள் பொலிசாருடன் மோதலில் ஈடுபட்டனர்.
இதனிடையே, கொல்லப்பட்ட மூன்று சிறுமிகளில் ஒருவரது தாயார் வன்முறை சம்பவங்களுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளதுடன், இது தவறான போக்கு என்றும் கண்டித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |